பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

வ.வே.சு.ஐயர்


அந்தத் துப்பாக்கிகள் எல்லாம் பம்பாயிலே இருந்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டது. புரட்சி எந்த உருவத்திலாவது உருவாகாதா? வெள்ளைக்காரன் வெளியேற மாட்டானா? என்ற நோக்கம் ஐயரிடம் வேரூன்றிவிட்டது.

பலாத்காரத்தின் மூலமாகத் தான் இந்தியா சுதந்திரம் பெறமுடியும் என்ற கருத்து ஐயரின் உயிர் மூச்சாக இருந்தது. ஆனால், இந்த ஐயரின் உணர்ச்சியும் சாவர்கரின் எழுச்சியும் அண்ணல் காந்தியடிகளது அகிம்சைத் தத்துவப் போக்கை மாற்ற முடியாமல் தோற்றுப் போயின. அவ்வாறிருந்தும் கூட, காந்தி பெருமானிடம் அவர்களுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் கடுகள்வும் குன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வ.வே.சு.ஐயரும், சாவர்கரும் பாரிஸ்டர் படிப்புக்காக லண்டனில் தங்கியிருந்தபோது, இந்தியா சுதந்திரத்தை வன்முறையால்தான் பெறமுடியும் என்பதற்காகப் போராடித் தொல்லைகளை ஏற்றுக் கொண்டிருந்த போது, காந்தியண்ணல் தென்னாப்ரிக்க இந்தியர்களது உரிமைகளுக்காக அதே வெள்ளை ஆட்சியை எதிர்த்துத் தென் ஆப்ரிக்காவிலே தலைமையேற்றுப் போராடிக் கொண்டிருந்தார்.

தென்னாப்ரிக்காவிலே வெள்ளையர் ஆட்சி இந்தியர்களுக்குக் கொடுத்துவரும் வரம்பு மீறிய செயல்களை லண்டனிலே உள்ள பிரிட்டிஷ் ஆட்சியின் பெரிய அதிகாரிகளைப் பார்த்துக் கூறி அதற்கோர் வழிகாணவேண்டும் என்பதற்காக அண்ணல் காந்தி லண்டன் நகர் வந்திருந்தார். அப்போது, ஐயர் அவர் தங்கியிருந்த முகவரியைத் தெரிந்து கொண்டு காந்தி பெருமானைச் சந்தித்தார்!

இந்தச்சந்திப்புக்கு முன்பு இருவரும் சந்தித்ததில்லை. அதனால், ஐயர் தன்னை யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். காந்திபெருமான் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இருவரும் இந்திய சுதந்திரத்தைப் பற்றி நெடுநேரம் உரையாடினார்கள். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான ஒரே வழி பலாத்காரம் தான் என்ற தனது உணர்வைக் காந்தியடிகளிடம் வற்புறுத்தி, வலியுறுத்தி ஐயர் பேசினார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/54&oldid=1082823" இலிருந்து மீள்விக்கப்பட்டது