பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

53


ஆனால், காந்தியண்ணல் ஐயர் கருத்துக்களை தக்க காரணங்களுடன் மறுத்து அகிம்சை ஒன்றுதான் சுதந்திர வழி என்று கூறினார் வாதப் பிரதி வாதங்கள் வளர்ந்து கொண்டே போவதை அறிந்த இருவரும் அவரவர் வழிகளே சிறந்தவை என்று முடிவு கட்டிக் கொண்டார்கள். ஆனால் இருவர் நோக்கமும் இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்பதுதான். இதில் வழிகள்தான் வெவ்வேறாகும் என்பதை உணர்ந்தனர்.

காந்தியடிகள் லண்டனில் இருக்கும்வரை ஐயர் அவரைத் தேடி அடிக்கடி சென்று தனது நட்பை வளர்த்துக் கொண்டார். சுதந்திர வேட்கையை அவர் காந்தியிடம் கூறி வழி கண்டு வந்தார்.

இந்த நேரத்தில் ஐயருக்கு ஓர் ஆசை எழுந்தது. லண்டனிலே வாழ்கின்ற சுமார் ஆயிரத்துக்கும் மேலான இந்தியர்களை ஒன்று கூட்டி ஏதாவது ஒரு விருந்து வைத்து மகிழவேண்டும் என்பதே அந்த ஆசை!

அதற்காகத் தீபாவளித் திருவிழாவைப் பயன்படுத்த விரும்பினார். இக் கருத்தை ஐயர் சாவர்கரிடமும், டி.எஸ்.எஸ். ராஜன் போன்றவர்களிடமும் கூறியபோது, எல்லோரும் அதை வரவேற்றார்கள். அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் எல்லாரும் செய்து வந்தார்கள்.

இந்த விழாவிற்குரிய சிறப்பு விருந்தினராக யாரை அழைக்கலாம் என்று இந்திய வாலிபர்களைக் கூட்டி ஐயர் கருத்தறிந்தார். எல்லோரும் ஒருமனதாக, தென்னாப்ரிக்காவிலுள்ள இந்தியர்களது உரிமைகளுக்காக, தனியொரு மனிதனாக நின்று போராடி வரும் காந்தியடிகள் சிறப்பு விருந்தினராக அழைக்கத் தகுதியுடையவர் என்ற முடிவுக்கு வந்து அவரையே அழைக்கத் தீர்மானித்தார்கள்.

ஐயர், காந்தியடிகளிடம் சென்றார். தங்களது தீபாவளி விழாத் திட்டத்தைக் கூறினார். காந்தியடிகள் அவ்விழாவின் சிறப்பு விருந்தினராக வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று பண்ரிவன்புடன் அவரைக் கேட்டுக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/55&oldid=1083373" இலிருந்து மீள்விக்கப்பட்டது