பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

வ.வே.சு.


செய்தபடியே இருந்தார். உணவு பரிமாறும் வரை செய்தார். எல்லாருடனும் அமர்ந்து உணவுண்டார்! காந்தியடிகளுடைய எளிமையும், இனிமையான பேச்சும், வ.வே.சு.ஐயரை மட்டுமன்று, விருந்துண்ண வருகை தந்த எல்லா லண்டன் வாழ் இந்தியர்களையும் கவர்ந்தன!

விருந்துண்ட பின்பு வந்திருந்த இந்தியர்கள் முன்பு காந்தியடிகள் விருந்துரையான தனது நன்றியுரையைப் பேசும்போது, 'எனக்கும் சாவர்கருக்கும், ஐயருக்கும் கொள்கை ஒன்றுதான். இந்திய நாடு பரிபூரண சுதந்திரம் பெறவேண்டும். இந்தியாவை ஆளும் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவை விட்டு வெளியேறிட வேண்டும். இதுதான் எங்களுடைய உயிர்க் கொள்கை.

ஆனால், அந்தச் சுதந்திரத்தைப் பெறுவது எப்படி? இந்தியாவை விடுவிப்பது எப்படி? இந்த வழியில்தான் எனக்கும் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு. இருந்தாலும் இருவருடைய லட்சியம் ஒன்றே. லண்டனிலே உள்ள இந்தியர்கள் அமைதியான முறையிலே போராட்டம் நடத்தி இந்தியாவின் விடுதலைக்கு வழி காண வேண்டும் என்றார்!

விருந்தில் கலந்து கொண்ட அடிகளுக்கு நன்றி தெரிவித்து சாவர்கர் அழகான வீரவுரை ஒன்றை முழக்கமிட்டார் பிறகு, காந்தியண்ணல் விடை பெற்றுச் சென்றார்!

விருந்திலே சாவர்கர் உரையைக் கேட்ட ஐயர், காந்தியடிகள் சாவர்கருடைய இதுபோன்ற இரண்டு பேச்சுக்களைக் கேட்பாரானால், சுதந்திரத்துக்கு பலாத்காரம் தான் சிறந்த வழி என்பதை ஒப்புக் கொள்வார் என்றார். பலாத்கார முறையில் ஐயர் அவ்வளவு நம்பிக்கை உடையவராக இருந்தார்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/58&oldid=1083381" இலிருந்து மீள்விக்கப்பட்டது