பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

வ.வே.சு.ஐயர்


பற்றிப் பேசுவதும், குற்றவாளி என்று நிரூபிக்கப்படுவதற்கு முன்பே குற்றவாளி என்பதும், கண்டனம் தெரிவிப்பதும் தவறு. அதற்குத்தான் நான் அந்தத் தீர்மானத்தைப் பகிரங்கமாக எதிர்த்தேன்" என்று குறிப்பிட்டார். எல்லாரும் இது உண்மைதானே என்று ஏற்றுக் கொண்டு அவரைப் பாராட்டினார்கள்.

இந்தச் சம்பவத்திற்குப் பின்பு, இந்தியா விடுதி மீது பிரிட்டின் அரசின் கண்காணிப்பு அதிகமானது. சாவர்கரையும், அவரது நண்பர்களையும் குற்றவாளிகள் என்று நீதி மன்றத்தில் நிறுத்திக் கடுமையான தண்டனைகளைப் பெற்றுத் தரவேண்டும் என்று அரசு பகீரத முயற்சி செய்து வந்தது. அதற்கான நடவடிக்கைகள் முயல் வேகத்தில் நடந்தன.

வ.வே.சு. ஐயரும், மற்ற நண்பர்களும் சாவர்கர் இனி லண்டனில் இருந்தால் எல்லோருக்குமே ஆபத்துதான் என்று அறிந்து சாவர்கரை பிரெஞ்சு நாட்டின் தலைநகரான பாரீஸ் நகருக்கு அனுப்பி வைத்தார்கள் மற்றவர்கள். அபிநவபாரத் சங்கப் பணிகளை ரகசியமாகச் செய்து வந்தார்கள்.

இந்தியாவிலுள்ள நாசிக் நகரத்தில் ஜாக்சன் துரை என்ற வெள்ளைக்கார அதிகாரி அப்போது சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுடப்பட்ட துப்பாக்கியை அனுப்பியவர் சாவர்கர் தான் என்றும், அவர் லண்டனில் இருந்தால் கைது செய்து எச்சரிக்கையுடன் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்றும், இந்திய அரசு ஓர் ரகசியக் குறிப்பை லண்டனுக்கு அனுப்பி வைத்தது. இந்தச் செய்தி யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே வைக்கப் பட்டிருந்தது.

ஆனால், இந்த ரகசியம் மூன்று மாதங்களாகப் பாரீசில் இருந்து வரும் சாவர்கருக்குத் தெரியாது. எல்லா நண்பர்களும் லண்டனிலே இருக்கும்போது நாம் மட்டும் இங்கே இருப்பது எந்த வகையில் நியாயம் என்று எண்ணிய சாவர்கர், லண்டனுக்குப் போக ஆயத்தமானார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/64&oldid=1083483" இலிருந்து மீள்விக்கப்பட்டது