பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

63


சாவர்கரிடம் சில செய்திகளைக் கலந்து யோசிக்க வேண்டும் என்று வ.வே.சு. ஐயரும், மற்ற நண்பர்களும் விரும்பியதால், உடனே லண்டனுக்குப் புறப்பட்டு வருமாறு சாவர்கருக்கு தந்தி அனுப்பினார் வ.வே.சு.ஐயர்.

தந்தியைப் படித்த பின்பு சாவர்கருக்கு லண்டன் போகும் எண்ணம் வலுத்தது. உடனே புறப்பட்டார். லண்டன் நகர் மண்ணிலே சாவர்கர் காலடிபட்டதும், போலீஸ் அவரைக் கைது செய்தது. அவ்வளவு எச்சரிக்கையோடு லண்டன் போலீஸ் பாரீஸ் நகரிலும் சாவர்கரைப் பின் தொடர்ந்து துப்புத் துலக்கியபடியே இருந்துள்ளது. சாவர்கரைக் கைதுசெய்தது ஏன் என்ற காரணத்தைச் சுதந்திர இந்தியச் சங்கத்தினர் போலீசிடம் கேட்டபோது, ஜாக்சன் கொலைவழக்கு சம்பந்தமாகவே அவர்கைது செய்யப்பட்டார் என்று போலீஸ் ஆணவத்துடன் பதிலளித்தது.

அந்த சமயத்தில்தான், வ.வே.சு.ஐயர் சிறைக்கு அடிக்கடி சென்று சாவர்கரைப் பார்த்து விட்டு வருவார். இவ்வாறு அடிக்கடி சிறைக்குச் சென்று பார்த்து வரும் இந்த வாலிபன் யார்? என்ற சந்தேகம் லண்டன் போலீசுக்கு அதுமுதல் தான் ஏற்பட்டது.

ஜாக்சன் கொலை வழக்குச் சம்பந்தமாக சாவர்கரை விசாரிக்க எப்படியும் இந்தியாவுக்கு அனுப்பத்தான் வேண்டும்; அப்போது அவரை எப்படியாவது தப்பிக்க வைத்து மீண்டும் பாரீசுக்குக் கொண்டு போய் விடலாம் என்ற ரகசியத் திட்டத்தை வ.வே.சு. ஐயர் சாவர்கரைப் பார்க்கப் போகும் போது சொன்னார்.

இவ்வாறு அடிக்கடி வந்து போகும் போதுதான், ‘யார் இந்தத் தாடிக்காரன்?’ என்ற சந்தேகம் லண்டன் போலீசுக்கே வந்தது. அது முதல், அந்தத் தாடிக்காரன் நடமாட்டத்தைப் போலீஸ் பின் தொடர்ந்து கண்காணித்து வந்தது. தாடிக்காரனையும் கைது செய்து சிறையில் தள்ளவேண்டும் என்ற முடிவுக்கு அரசு வந்தது. ஐயரைக் கைது செய்யுமாறு போலீசுக்கு அரசாணை வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/65&oldid=1083700" இலிருந்து மீள்விக்கப்பட்டது