பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

வ.வே.சு.ஐயர்


இருந்ததால், அங்கு இந்திய தேசியவாதிகளது வரலாற்றையும் உணர்வையும் நன்கு மதித்தவர். அதனால், இந்தியா சுதந்திரம் அடைவதில் அவர் பெருமைப்பட்டுக் கொண்டு, ஓர் இலட்சிய ஆர்வலராக இருந்தார். இந்திய சுதந்திரத்திற்காக யார்யார் அரும்பாடுபட்டாலும், அவர்களுக்குரிய பொருளாதாரத் தட்டுப்பாடுகளைப் போக்கி உதவும் கருணை உள்ளம், சுதந்திர மனம் அவருக்கு இருந்தது. அதனால், இந்தியப் புரட்சி வாதிகளுக்குக்குரிய பணஉதவிகளைத் தவறாது, மறுக்காது அவர் உதவிபுரிந்து வந்தார். பாரீஸ் சென்று அதையே புகலிடமாகக் கொண்ட வ.வே.சு.ஐயர், சாவர்கர் போன்றவர்களுக்குரிய பொருள் வசதிகளை அந்த அம்மையாரே செய்து வந்தார்.

அத்தகைய காமா அம்மையாருடன் கலந்து பேசிய பிறகுதான், சாவர்கரை பிரிட்டிஷ்காரர்களின் கப்பல் காவலிலே இருந்து காப்பாற்றிடும் திட்டத்தை வ.வே.சு. ஐயர் தீட்டினார். சாவர்கரை கட்டாயமாக இந்தியாவுக்குக் கொண்டு சென்றுதான் அந்தக் கொலை வழக்கை விசாரிக்க முடியும். அவரைக் கப்பலில் தான் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். லண்டனிலே இருந்து இந்தியா செல்லும் கப்பல் பிரெஞ்சுத் துறைமுகமான மார்சேல்ஸ் வழியாகத்தான் போயாக வேண்டும். அதனால், எந்தக் கப்பலில், என்றைக்குச் சாவர்க்கரை இந்தியாவுக்கு பிரிட்டிஷ் போலீசார் அழைத்தச் செல்வார்கள் என்பதை அறிந்து கொண்டு அவரைத் தப்பிக்குமாறு ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும் என்பதே வ.வே.சு. ஐயரும், காமா அம்மையாரும் கலந்து போட்ட திட்டமாகும். இதற்குரிய வழிகள் என்ன என்பதைக் காமா அம்மையாரும் வ.வே.சு. ஐயரும் மற்ற பிரான்ஸ் நண்பர்களும் கலந்து பேசினார்கள்.

இலண்டனிலே இருந்து வரும் கப்பல் மார்சேல்ஸ் துறை முகத்திற்கு இரவில் வரும், அன்றிரவு அங்கே தங்கும். விடியற்காலை துறைமுகத்தை விட்டுப் புறப்படும். துறை முகத்தை விட்டுப் புறப்பட்டுக் கப்பல் சிறிது தூரம் சென்ற பின்பு, சாவர்கர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/68&oldid=1083721" இலிருந்து மீள்விக்கப்பட்டது