பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என். வி. கலைமணி

67


கப்பலிலே இருந்து குதித்துக் கரையை நோக்கி நீந்தி வரவேண்டும். அங்கே ஐயரும், காமா அம்மையாரும் மற்றும் சில பிரான்ஸ், நண்பர்களும் கார் ஒன்றை நிறுத்தி வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டும். கப்பலில் நீந்திக்கரை சேரும் சாவர்கரைக்காரில் ஏற்றிக் கொண்டு பாரீஸ் நகருக்குப் போய் விட வேண்டும். இதுதான் வ.வே.சு. ஐயரும் காமா அம்மையாரும் போட்ட திட்டமாகும்.

சாவர்கருக்கும் இத்திட்டம் ரகசியமாக அறிவிக்கப்பட்டது. அவரும் அந்தத் திட்டத்திற்குச் சம்மதம் தெரிவித்து ஐயருக்குச் செய்தி அனுப்பிவிட்டார். இந்த ரகசியம் வேறு யாருக்கும் தெரியாது. என்று புறப்படப்போகிறார் சாவர்கர் என்ற நாளை எல்லாரும் எதிர்பார்த்திருந்தார்கள். அந்த நாள் வந்தது. கப்பலில் சாவர்கருக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட திட்டத்தின்படி கப்பல் மார்சேல்ஸ் துறைமுகத்தை வந்தடைந்து விடியற்காலை புறப்பட்டது.

போலீசாரிடம் அனுமதி பெற்று சாவர்கர் காலை மலஜலம் கழிக்கக் கழிப்பறைக்குச் சென்றார். போலீசார் துப்பாக்கியுடன் கதவுக்கு வெளியே காத்திருந்தார்கள். அங்கிருந்து கண்ணாடிக் கதவு வழியாகச் சாவர்கர் செயலைப் பார்த்துக் கொண்டே நின்றார்கள். கழிப்பறைக்குள் சென்ற சாவர்கர் தனது உடைகளைக் கழற்றி கண்ணாடிக் கதவின் மேல் போட்டு மூடினார். அதனால்; அவர் உள்ளே என்ன செய்கிறார் என்பது தெரியாது கண்ணாடியை மறைத்தவுடனே ஜன்னல் வழியாகக் கடலில் குதித்தார். நீரிலே அவர் விழுந்த ஓசையைக் கேட்ட போலீசார் இரண்டுபேர் சாவர்கரைப் பிடிக்கக் கடலிலே குதித்து நீந்தி விரட்டினார்கள்!

கப்பல் நின்றது! சாவர்கர் வெகுவேகமாக மூச்சு வாங்கவாங்கக் கடற்கரையை அடைந்தார். வ.வே.சு.ஐயரும், காமாட்சி அம்மையாரும் அவர்களது நண்பர்களுடன் காரை வைத்துக் காத்துக் கொண்டிருந்த இடத்தை நோக்கி அவர் ஓடினார். பிரிட்டிஷ் போலீசாரும் கடலின் கரை ஏறி விரட்டிக் கொண்டே சாவர்கர் பின்னால் ஓடி வந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/69&oldid=1083723" இலிருந்து மீள்விக்கப்பட்டது