பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

வ.வே.சு.


அப்போது ஒரு பிரெஞ்சுப் போலீஸ்காரன் ஓடிவந்து சாவர்கரைத் தடுத்து நிறுத்தினான்! அதற்குள் பிரிட்டிஷ் போலீசார் ஓடிவந்து பிரெஞ்சுப் போலீசாருடன் ஏதோ பேசி, ஒரு பவுன்தங்க நாணயத்தை அவனுக்குக் கொடுக்கவே, அவனும் பிரிட்டிஷ் போலீசாரிடம் சாவர்கரை ஒப்படைத்துவிட்டான்.

வ.வே.சு. ஐயர் பிரெஞ்சுப் போலீஸ் காரனைக் கண்டித்து, 'இது பிரெஞ்சு நாட்டு எல்லை அல்லவா? இங்கே ஓடி வந்தவரை நீ பிடித்து எப்படி பிரிட்டிஷ் போலீசிடம் ஒப்படைக்கலாம்?' என்று பலமாகக் கண்டித்தார் ஆனால் அதனால், பயனேதும் இல்லை!

பிரிட்டிஷ் போலீஸ்காரர்கள் சாவர்கரைப் பரபரவென்று இழுத்துக் கொண்டே போனார்கள். நமக்கு அரசியல் குருவாக இருந்த பல்துறை ஞானியான சாவர்கரை நம்மால் காப்பாற்ற முடியவில்லையே பரபரவென்று அவரை இழுத்துக் கொண்டும், தள்ளிக் கொண்டும் போனார்களே! என்று மனம் நொந்து வருந்தி வேதனையடைந்தார் ஐயர்!

கப்பலில் இந்தியா கொண்டு வரப்பட்ட சாவர்கரை நீதி மன்றத்தில் விசாரணை செய்தார்கள். அவருக்கு ஐம்பதாண்டு காலம் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவரை அந்தமானுக்கு அனுப்பியது பிரிட்டிஷ் அரசு! அங்கே சாவர்கர் அனுபவிக்க முடியாத துன்பங்களை எல்லாம் அனுபவித்தார்! அதே நேரத்தில் சிறைக் கைதிகளின் மனத்திலே இடம் பெற்று அவர்களைச் சீர்திருத்தி ஒழுக்கக் சீலராக மேம்படுத்தினார் சாவர்கர்! அவர்பட்ட சித்தரவதைகளுக்கு எல்லாம் ஒரு சிறப்பு கிடைத்தது. அது அவருடைய வரலாற்றிலே படிக்கக் கூடிய சிறப்புச் சம்பவங்களாகும்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/70&oldid=1083728" இலிருந்து மீள்விக்கப்பட்டது