பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பல மாறுவேடங்களில் ஐயர் இந்தியா திரும்பினார்!

பிரெஞ்சு நாட்டின் தலைநகரமான பாரீஸ் நகரில் தனது அரசியல் குருவான சாவர்கரைப் பிரிட்டிஷ் போலீஸ் படையிடம் இருந்து காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்று கவலையும், கண்ணிரும் ததும்பும் சோகத்துடன் வ.வே.சு. ஐயர் பாரீஸ் நகரத்தின் சாலையிலே தனி மனிதனாக நின்று தவித்தார்! எவ்வளவோ ஆறுதல்களைக் காமா அம்மையார் அவருக்குக் கூறிய பிறகும்கூட, ஐயர் ஒரே துயர மயமாகி பாரிஸ் வீதிகளிலே அலைந்து திரிந்து கொண்டே இருந்தார்!

மறுபடியும் நாம் எங்கே போவது என்ற கவலை அவரைத் துன்புறுத்தியது. மீண்டும் லண்டன் போகலாமா என்றால் அங்கே பிரிட்டிஷ் போலீஸ் படையின் தொல்லைகளையும் துன்பங்களையும் ஏற்றாக வேண்டுமே என்பதால் அங்கே போக அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால், காமா அம்மையார் வீட்டில் இருக்கலாமா என்றால் அங்கும் அவருக்குப் பாரமாக இருக்க வேண்டும் என்ற குழப்பங்களிலே சிக்கி என்ன செய்வது என்று சிந்தித்தார்.

இறுதியாக அவர், இந்தியாவுக்கே மீண்டும் திரும்பிவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார். பார்சிக்காரர் போல ஐயர் மாறுவேடம் போட்டுக் கொண்டு, காமா அம்மையாரிடம் தேவையான பொருள் வசதிகளைப் பெற்றுக் கொண்டு. இத்தாலி நாட்டின் தலைநகரமான ரோம் நகருக்கு வந்து சேர்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/71&oldid=1083782" இலிருந்து மீள்விக்கப்பட்டது