பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

வ.வே.சு.ஐயர்


பயிற்சியைப் பெற்றார் என்று பதில் கூறப்பட்டது. இந்தக் காரணத்தால்தான் வ.வே.சு. ஐயரை ஆஷ்துரை கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தி; அவரையும் கைது செய்திட பிரிட்டிஷ் ஆட்சி திட்டமிட்டிருந்தது.

இக் காரணத்தை முன்வைத்து, புதுச்சேரியிலே உள்ள வ.வே.சு. ஐயரை எப்படிக் கடத்திவருவது என்று பிரிட்டிஷ் ஆட்சி பரிசீலனை செய்து கொண்டிருந்தது. பிரெஞ்சுப் பகுதியான புதுச்சேரி நகரிலே இருந்து, மெதுவாகப் பிரிட்டிஷ் பகுதியிலே உள்ள சின்னபாபு சமுத்திரம் என்ற எல்லைக்கு ஐயரைக் கடத்திக் கொண்டு வருபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு கொடுக்கப்படும் என்று புதுச்சேரிக்கு அருகே உள்ள பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட எல்லையில் அரசு தண்டோரா போட்டு மக்களுக்குத் தெரிவித்தது. அதனைப் போலவே அதிகாரிகளும் அறிக்கை வாயிலாக அதே செய்தியை மக்களுக்குத் தெரிவித்தார்கள்.

ஐயர் தலைக்குப் பத்தாயிரம் ரூபாயா! என்று புதுச்சேரி மக்களும், அதனைச் சூழ்ந்துள்ள கிராமத்தார்களும் வியந்து போனார்கள். ஆனால், எந்த ஒரு மனிதனும் அவரைப் பிடித்து வெள்ளையனிடம் ஒப்படைக்க முன்வரவில்லை. அந்த அளவுக்கு அப்போது மக்கள் இடையே தேசாபிமானம் ஒற்றுமை உணர்வு ஓங்கி வளர்ந்து காணப்பட்டது.

எனவே, ஐயரைப் புதுச்சேரியிலே இருந்து குண்டுக் கட்டாக, இரவோடு இரவாகத் தூக்கிக் கொண்டு வந்து விடுவது என்று சதித்திட்டம் போட்ப்பட்டது. ஆனால், ஐயர் எல்லாச் சூழ்ச்சிகளையும் தகர்த்து, இந்திய, பிரிட்டிஷ் ஆட்சிகளின் முகத்திலே கரிபூசி அவமானப்படுத்தி விட்டார்! போலீசாரின் எந்த வித நடவடிக்கைகளையும் சந்திக்கத் தயாராக இருந்தார் என்பது மட்டுமல்ல; அவர்களின் எந்த நிக்ழ்ச்சிக்கும் ஐயர் இடம் கொடுக்காமலேயே விழிப்புடன் இருந்தார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/76&oldid=1083858" இலிருந்து மீள்விக்கப்பட்டது