பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

வ.வே.சு.ஐயர்


இந்தப் பிரச்னை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பலத்த சர்ச்சையைக் கிளப்பிவிட்டது. அதனால், காந்தியடிகள் கூறினால், அல்லது ஆணையிட்டால் வ.வே.சு. ஐயர் பணிந்து விடுவார் அல்லது கேட்டு ஆவன செய்வார் என்ற எண்ணத்தால், தமிழ்நாட்டின் முற்போக்காளர்களில் சிலர், காந்தியண்ணலிடம் சென்று எடுத்துக் கூறினார்கள். அதற்கு மகாத்மா காந்தி, அந்தச் சர்ச்சையில் நான் தலையிடமாட்டேன் என்று கண்டிப்பாகவே கூறிவிட்டார்.

டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் திருச்சிநகரைச் சேர்ந்தவர் மட்டுமல்லர், லண்டன் நகர்லே உள்ள “இந்தியா விடுதி”யிலே ஒன்றாகத் தங்கிப் பாரிஸ்டர் பட்டத்துக்குப் படித்தவரும் கூட அது மட்டுமன்று வ.வே.ச. ஐயரும் திருச்சி நகர் தந்த வரகனேரி தியாகமூர்த்தி என்பதால், டாக்டர் ராஜனும், மற்றும் சிலரும் ஐயரிடம் சென்று, ஐயர் பிடிவாதம் காட்டாமல், எல்லா சாதி மாணவர்களும் ஒன்றாய் அமர்ந்து சமபந்தி உணவு உண்பதற்கு தக்க வழி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். எல்லாருக்கும் ஐயர் முடியாது என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார்.

இந்த வர்ணாசிரமக் களங்கம், வ.வே.சு. ஐயருக்கு இருந்த பன்முகத் திறமைகளையும் பன்முகப் பண்புகளையும், பன்முக அறிவுகளையும் பாழ்படுத்திவிட்டது மட்டுமல்ல; அவருக்கு பெரிய தலைவர்களிடம் இருந்த தொடர்பையும் அறுந்து போகச்செய்து விட்டது. அரசியல் குறுக்கத்தையும், அறிஞர்களது அருவருப்பையும் உருவாக்கி விட்டது எனலாம். இந்தப் பிரச்னை பின்நாளில் ஆசிரமத்தில் பெரிய பிளவை மட்டும் உருவாக்கவில்லை. அதை மூடவும் வேண்டிய நிலைக்கு எதிர்ப்பு எழுந்துவிட்டது.

வ.வே.சு. ஐயரை, அவரைச் சேர்ந்த நண்பர்கள் ‘தேசபக்தன்’ என்ற பத்திரிக்கைக்கு ஆசிரியராக்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/86&oldid=1084002" இலிருந்து மீள்விக்கப்பட்டது