பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

11


நாகரிகங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டதால், தமிழர் நாகரிகம் ஒன்று மட்டும்தான் அருகம்புல் போல் வேர் படர்ந்து பரவி, ஆல்போல விழுதுகள் விட்டு உலகிலே பழம்பெரும் நாகரிகங்களின் தாயாக இன்றும் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.

அதனால், கிரேக்க நாகரிகத்துக்குள் தமிழர் நாகரிகமும், பண்பாடும், பழக்க வழக்கங்களும், தமிழ்ச் சொற்களும் புகுந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் தக்கச் சான்றுகளோடு விளக்கி உள்ளார்கள். அதிலும் குறிப்பாக, ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் அலாஸ்கா என்ற வட அமெரிக்கத் தீபகற்பம் வழியாக அமெரிக்கா சென்று அங்கேயும் தமிழர் நாகரிகத்தைப் பரப்பிய செய்திகளையும் நாம் வரலாற்றிலே படிக்கின்றோம்.

எனவேதான், உலக நாகரிகங்களை ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் எல்லாரும் தமிழ் பண்பாடுகள் தான் உலக நாகரிகங்களுக்கே பெரும் வளத்தை வழங்கியுள்ளது என்பதைத் தெளிவாகவே கூறியுள்ளார்கள். அது மட்டுமன்று, தமிழ்நாடுதான் உலக நாகரிகங்களின் தொட்டில் என்றும் வரலாற்று ஆதித் தந்தையான ஹிராடெடஸ் என்ற மேதை தான் எழுதிய வரலாற்று நூலிலே குறிப்பிட்டிருக்கிறார்.


2. வரலாற்றின் வரலாறு!

ஹிராடெடஸ் என்ற சரித்திரத்தின் நாயகன் - வரலாற்றின் ஆதித் தந்தை என்று, வரலாற்று ஆசிரியர்கள் போற்றுகிறார்கள், வாழ்த்துகிறார்கள். வரலாறு என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறையை உலகுக்கு முதன்முதலில் விளக்கி எழுதியவரும் ஹிராடெடஸ் என்ற மேதைதான். அப்படியானால், ஹிராடெடசுக்கு முன்னால் வரலாறு என்ற துறையே இல்லையா?