நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
17
உட்பகுதிகளிலே புகுந்து, அங்கங்கே வாழ்கின்ற மக்களை எல்லாம் சந்தித்து, ஒரு வரலாறு எழுதப்படுவதற்கான காரண, காரியங்களை எல்லாம் கேட்டறிந்து, தக்க குறிப்புக்களை எடுத்துக் கொண்டும் அவற்றைத் தனது மனத்திலே பதித்துக் கொண்டும் வரலாறுகளைத் திரட்டி பல அரிய செயல்களைச் செய்தார்!
இவ்வாறு, உலகைச்சுற்றி ஒரு வரலாற்றை எழுதிட செயற்கரிய செயல்களைச் செய்த முதல் வரலாற்று ஆசிரியர் ஹிராடெடஸ்தான் என்றால், அவர் அந்த நூலை எழுதிட எவ்வளவு அக்கறையோடு அரும்பாடுபட்டிருக்கிறார் என்பதை இன்றும் நாம் எண்ணும் போது உடல் சிலிர்க்கின்றது.
அவர் மக்களிடம் கேட்ட செய்திகளையும், தான் பார்த்த உண்மைகளையும், மக்களால் கூறப்பட்ட சிறு சிறு கதைக் குறிப்புகளையும், மன்னர்களது வாழ்வில் நடந்த சம்பவங்களையும், நன்கு விசாரணை செய்து, இவற்றை எல்லாம் சேகரித்து, அவற்றுக்கு ஓர் உருவம் கொடுத்த பின்பே - தனது ‘வரலாறுகள்’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.
ஏதன்ஸ் நகர மக்கள் ஒன்று திரண்டு கி.மு. 444 ஆம் ஆண்டின் போது இத்தாலி நாட்டின் தென்பகுதியில் ஒரு குடியேற்றத்தை அமைத்துக் கொண்டு, அதற்குத் ‘தூரிக்’ என்று பெயர் வைத்துக் கொண்டனர். அந்தக் குடியேற்ற மக்களில் லைசியர், சைரக்கியூஸ் நாடுகளைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். லைசியர்கள் இடையே அப்போது லைசியாஸ் என்ற ஒரு சிறந்த பேச்சாளரும் இருந்தார். இவருக்கும் ஹிராடெசுக்கும் நட்பு ஏற்பட்டதால் ஹிராடெடசும் அந்தக் குடியேற்ற மக்களிடையிலேயே தனது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு அவர்களுடனேயே வாழ்ந்தார்.
அந்தப் பகுதியிலே அவர் ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்தபின்பு, தான் எழுதியவற்றை எல்லாம் ஒன்பது நூல்களாகத் தொகுத்தார்.