உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

45


திருடர்கள் அங்கே வருவது இல்லை. வேறு வகையான செல்வங்களும் அங்கே அதிகமாகக் குவிக்கப்பட்டிருந்து. செல்வ வளமிக்க ஒரு கோயிலாக அது அக்காலத்தில் இருந்தது.

டெல்பி தேவதைக் கோயிலின் நடுப் பகுதியில் ஒரு சிறிய துவாரம் வழியாக அடிக்கடி ஒரு வகை வாசனை கமழும் புகை வெளிவந்து கொண்டிருக்கும். அத்துவாரத்தின் மேல் ஒரு முக்காலியைப் போட்டு அதன் மேல் ‘பைதியா’ என்று கூறப்படும் கோயில் பூசாரிப் பெண் அமர்ந்து கொண்டு, உடலை ஒரு போர்வையால் மூடிக்கொண்டு, அசரீரி போன்ற குரலோசையுடன் குறி சொல்வாள்.

அப்பொலோ தெய்வமே அங்கு வந்து புகை உருவத்திலே குறி கூறுவதாக மக்கள் நம்பினார்கள். அச் சொற்களை மிகக் கவனமாக மக்கள் பின்பற்றி நடப்பார்கள் அவையாவும் ஏதோ ஒரு தெய்வப்பா போல எண்ணப்பட்ட செய்யுள் வடிவமாகும்.

டெல்பி கோயிலின் அப்பொலோ அசரீரி இருக்கிறது என்று எப்படி அந்நாட்டு மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது? என்ன காரணம்? என்ற கேள்விகள் எழக் கூடும். ஹிராடெடஸ் மக்களிடம் விசாரணை செய்த சம்பவங்களை விளக்கித் தனது நூலின் எழுதியிருப்பதாவது.

கோயில் நடுப்பகுதியிலிருந்த துவாரத்தின் வழியே வாசனையுடன் கூடிய புகை வெளிவந்து கொண்டிருந்த போது, வெள்ளாடுகள் சில அந்த துவாரத்தின் மேல் ஏறி நின்று கொண்டிருந்தன. அதனால் அந்த ஆடுகளுக்கு ஒரு விதமான இழுப்பு நோய் வந்து அங்கேயே எல்லாம் மயங்கி, சுருண்டு விழுந்துவிட்டன. பூசாரிகள் இதைப் பார்த்தார்கள்! உடனே தூபதீபங்களிட்டுப் பிரார்த்தனை செய்து கொண்டார்கள்.

எழுந்தது அப்போது அசரீரி வாக்கு! அந்த அருள்வாக்கில், அக்கோயிலில் பெண்கள் தான் குறி சொல்லவேண்டும் என்று