பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

ஹிராடெடஸின்



அதனால், கிரேக்க நாட்டிற்கு அக்கால கட்டத்தின் போது, தத்துவ ஞானிகளும், ஆசிரியர்களும், கலைஞர்களும், கவிஞர்களும், மிகச் சிறந்த பேச்சாளர்களும் ஒவ்வொருவராக வந்து போகும் சிறப்பை அந்த நகர் பெற்றிருந்தது.

அவ்வாறு வந்தவர்களுள் ஒருவர் சோலான் என்பவர், அவர் புகழ் பெற்ற ஒரு சட்ட நூல் மேதை; வழக்கறிஞர்; ஏதென்ஸ் நகரக் குடி உரிமையாளரும் ஆவார். அவர் வரலாறு பற்றி சிறிது பார்ப்போம்.

சோலான் கி.மு. 639-ம் ஆண்டில் கிரேக்க நாட்டில் ஏதென்ஸ் நகரில், எக்சிசெஸ்டைடிஸ் என்பவருக்கும் பிசிஸ்டிராடிஸ் என்ற தாய்க்கும் பிறந்தவர். அவர் தந்தை ஆடம்பரமாக, செல்வச் சீமானாக வாழ்ந்தார். ஆனால் பெரும் செலவாளி.

சோலானும் தந்தையைப் போலவே வாழ எண்ணினார். அதற்குப் பணம் தேவை அல்லவா? அதனால் பெரும் தொகையை சம்பாதிப்பது எப்படி என்று சிந்தித்தார். அப்போது சலமிஸ் என்ற நகரம் யாருக்குச் சொந்தம் என்பது பற்றி, ஏதென்சுக்கும் - மெகரா நகருக்கும் கடும் போட்டியால் விவாதம் நடந்தது. அதில் சோலான் கலந்து கொண்டு விவாதம் செய்தார்.

மெகரா நாட்டினர் தோல்வி கண்டனர், அதனால் அந் நகர மக்கள் நகரை விட்டுத் துரத்தப் பட்டார்கள். ஸ்பார்டா இடையில் நடுவராக நின்று அந்தப் போரை தீர்த்து வைத்தார். அதனால் அவர் அங்கே சட்ட மன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஏதென்சுக்கு அரசியல் சட்டங்களை எழுதித் தருமாறு அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. சோலான் இயற்றிய அரசியல் சட்டங்கள் கி.மு. 580 ஆம் ஆண்டில் மர உருளைகளிலும், கனக் கூம்புகளிலும், பொறிக்கப் பட்டன. அவர் அரசியல் சட்டங்களை இயற்றியதும், உலகைச் சுற்றிவர வேண்டும் என்று விரும்பினார். அந்த விருப்பத்தால் அவருக்குரிய நன்மை என்ன?