பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

79இன்று வரை தமிழ் நாட்டு மக்களுக்குச் சரியான, உண்மையான தமிழ் நாட்டு வரலாறு யாராலும் எழுதப்படவில்லை. ஆனால், உண்மை என்ன? தமிழர்களுக்குள்ள மெமூரியா கண்டம் அதாவது நாவலந் தீவு கடற்கோள்களால் அழிக்கப்பட்டது முதல், முதல், இடை, கடைச் சங்கங்கள் மன்னர்களது ஆட்சிகள், பெரும்புலவர் வரலாறுகள், அப்போது நிலவியிருந்த பண்டைய முழு நாகரிகக் கூறுகள், பண்பாடுகள் தெளிவாக ஆராயப்படவில்லை என்பதே உண்மை. அவ்வாறிருக்க, எப்படிச் சரியான உண்மையான தமிழ்நாட்டு வரலாறு நமக்குக் கிடைக்கும்?

கடற்கோள்களால் பண்டையத் தமிழ் நூல்கள் எல்லாம் மறைந்துவிட்டன. தமிழ்ப்பகைவர்களால் நூல்கள் அழிக்கப்பட்டன என்றும், ஏதோ மறைமலையடிகளார், தேவநேயப் பாவணர், பன்மொழிப் புலவர் அப்பாதுரையார், கந்தையா பிள்ளை போன்ற சிலரது அரிய கடும் உழைப்புகளால், தமிழ்த் தாத்தா உ.வெ. சாமிநாத ஐயர் போன்ற மற்றும் சிலரால் அவர்கள் எழுதும் நூல்களில் அத்திப் பூத்தார்போல சில கருத்துக்களை அங்கங்கே கூறியுள்ளார்கள் என்ற மன நிறைவேயன்றி, வேறு ஒன்றும் இல்லை. இதனால் மட்டும் உண்மையான தமிழர் வரலாறு கிடைத்துவிடுமா?

ஆசியா மைனர் பகுதியிலே; கி.மு.484 ஆம் ஆண்டிலே தோன்றிய ஹிராடெடஸ் என்பவர், தமிழ் நாட்டின் தென் கோடியிலே பனையேறிகளாக வாழ்ந்த தமிழர்கள் கடல் மார்க்கமாக வந்து பினீசியர் என்ற பெயர் பெற்று, பிறகு ஒவ்வொரு நாட்டுக்கும் அவர்கள் சென்று, நடை மார்க்கமாகவும் நடந்து கடலூர்ந்தும் அமெரிக்கா சென்று, போன இடங்களிலே எல்லாம் தமிழர் பண்பாடுகளை உலகெங்கும் பரப்பினார்கள் என்று ஆராய்ச்சி செய்து அவற்றைத் தனது ‘வரலாறுகள்’ என்ற நூலிலே எழுதியுள்ளார் என்றால், அந்தச் சான்றோனை தமிழர் வரலாறும், தமிழர் பண்பாடும் பாராட்டாமல் இருக்க முடியுமா?