பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்ஹிராடெஸ் மட்டுமன்று, பிளினி, பெரிப்ளுஸ், மெகஸ்தனிஸ், தாலமி, ஸ்டிராபோ, அரியன் இண்டிகா, அல்பெருணி, இபின்படூடா, யுவான்-க-வாங், பாகியான், இத்-சிங் போன்ற ஆய்வாளர்களின் துணை கொண்டாவது திண்மையான ஒரு தமிழ் நாட்டு வரலாறு எழுதப்படவேண்டாமா? அதற்கு இன்றைய தமிழ் இலக்கியங்களான திருக்குறள் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, ஐம்பெருங்காப்பியங்கள், கம்பராமாயணம், சேக்கிழார் பெரிய புராணம் ந.சி. கந்தையா பிள்ளை, கனக சபை பிள்ளை எழுதியது போன்ற நூல்களது உதவிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா? என்று, வரலாற்று நூல்கள் பல எழுதிய ஹிராடெடஸ் போன்று இன்று நம்மிடையே விளங்கும் வி.எஸ்.வி. ராகவன் தமிழ் உலகைப் பார்த்து வினா தொகுத்துள்ளார்! கிடைக்குமா விடை?

ஆங்கில நூலறிவு அதற்குவேண்டாமா என்று சிலர் கேட்கலாம்; வேண்டும் தான். நமக்குக் கிடைக்கும் தமிழ் நூல்களைக் கொண்டு, நமது அறிவை அகலமாக்கி, தமிழர்க்கு தமிழ் நாட்டுக்கு - இருந்த மிகப் பெரிய வரலாற்றை ஆய்ந்து, ஒரு முகமாக்கி, உண்மைகளை ஊடுருவி ‘தமிழ் நாட்டின் ஆதி வரலாறு’ என்ற சங்கோசையை வழிகாட்டியாக நிறுத்தி ஊத வேண்டாமா?

எனவே, நாகரிகம் என்றால் என்ன என்பதையே அறியாத அன்றைய உலகத்தில், தமிழ் நாகரிகம் என்ற குழந்தையை, பண்பாட்டுணர்வுகள் என்ற தொட்டிலிலே போட்டு உலகின் ஒரே மாழியாக இருந்த தமிழ் மொழியால் ஆராரோ பாடிய தமிழ் நாகரிகம் தான் முதன் முதல் உலகில் தோன்றிய நாகரிகம், அந்த நாகரிகம்தான் இன்று உலகமெல்லாம் பரவிக்கிடக்கின்றது. அதனை அடிப்படைத் தத்துவமாக வைத்துத்தான் கணியன் பூங்குன்றனார், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற நாகரிக ஜோதிடத்தைக் கணித்துக் கூறினார் என்பதற்கு, ஹிராடெடஸின் கருத்தாய் ஓவியங்கள் எல்லாம் சான்றாக நமக்கு ஊக்கம் அளித்து நிற்கின்றன! இனியாவது, யாராவது தமிழ் நாட்டின் ஆதிவரலாற்றை எழுதுவார்களா?

★★★