பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

ஹெர்க்குலிஸ்


அவளும் ஹெர்க்குலிஸைப் பார்த்துப் பேசலானாள்: ‘ஹெர்க்குலிஸ்! உன்னை என் சகோதரி ஏமாற்றப் பார்க்கிறாள். நகரில் வாழ்க்கை சுகமாகத்தான் தோன்றும். ஆனால், அதற்காக நீ செலுத்த வேண்டிய விலை மிக அதிகமாயிருக்கும். அங்கே உள்ளது சோம்பேறி வாழ்க்கை. நீ அங்கே செல்ல வேண்டா. என்னுடன் இந்த மலைப்பக்கம் வா! இந்த மலைமீது ஏறுவது கடினந்தான். மேலே செல்லச் செல்ல. மேலும் கடினமாயிருக்கும். ஆயினும், மலையின் உச்சியை அடைந்துவிட்டால், தெவிட்டாத இன்பத்தைப் பெறலாம். இந்த மலையின் மாருதமே உன்னை நிகரற்ற வீரனாக்கிவிடும். அச்சமில்லாமல், இடைவிடாமல் நடந்து, இந்த மலைமீது ஏறிவரத் துணிந்தால், இறுதியில் நீ ஒலிம்பிய மலைச்சிகரத்தையும் அடைந்து, தேவர்களுடன் வாழும் பேற்றையும் பெறுவாய்!


கனவிலே கண்ட காரிகைகளில் ஹெர்க்குலிஸ் இரண்டாவது காரிகையையே பின்பற்றிச் செல்லத் துணிந்தான். கஷ்டங்கள் நிறைந்த மலைப்பாதையே தனக்கு உகந்தது என்று அவன் தீர்மானித்தான். அவன் நித்திரை கலைந்து எழுந்த பின்னும் அவனால் தான் கண்ட கனவை மறக்க முடியவில்லை. தன் வாழ்க்கையை எந்த நெறியில் செலுத்தலாம் என்பதைத் தெரிந்துகொள்ளவே அந்தக் கனவு தோன்றியதாக அவன் எண்ணிக்கொண்டான். உடல் வருந்தாமல் சுக வாழ்வு வாழ்வதில் உண்மையான இன்பம் எதுவுமில்லை என்றும், எத்தகைய துன்பத்தையும் எதிர்கொண்டு ஏற்று, வீர தீரத்துடன் அரும்பெரும் காரியங்களைச் செய்து, மக்களுக்குத் தொண்டு செய்வதே தன் வாழ்வின் குறிக்கோளாயிருக்க வேண்டுமென்று அவன் தீர்மானித்தான். அவனைப் போன்ற வீரனுக்கு வெறும் உயிரைக் சுமந்துகொண்டு உலவுவது வாழ்க்கை ஆகாது என்று அவனுக்குத் தெளிவாகிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/10&oldid=1074295" இலிருந்து மீள்விக்கப்பட்டது