பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4. ஒன்பது தலை நாகத்தை வதைத்தல்


ஹெர்க்குலிஸ் நிறைவேற்ற வேண்டிய இரண்டாவது பணியாக லெர்னா வனத்திலிருந்த ஒன்பது தலை நாகத்தை, வதைக்க வேண்டுமென்று யூரிஸ்தியஸ் கட்டளையிட்டான். இந்தத் தடவை ஹெர்க்குலிஸ் நிச்சயமாகத் திரும்ப மாட்டான் என்று அவன் எண்ணிக்கொண்டான்.


லெர்னா என்பது ஆர்கோஸ் நகரிலிருந்து ஐந்து மைல் தொலைவிலுள்ள ஒரு பெருந்தோட்டம். அது கடற்கரையை ஓட்டியிருந்தது. பான்டினஸ் மலைக்குக் கிழக்கில் அது கடல்வரை பரவியிருந்தது. அதற்கு அருகில் பான்டினஸ் என்ற பெயரையே கொண்ட ஓர் ஆறு அமிமோன் என்ற ஆறும் ஓடிக்கொண்டிருந்தன. அந்தப் பிரதேசம் மிகவும் செழிப்புள்ளது. அங்கே தேவர்களுக்குரிய ஆலயங்களும் இருந்ததால், அது புனிதத் தலமாகவும் கொண்டாடப்பெற்று வந்தது. அமிமோன் ஆற்றின் உற்பத்தித் தலத்தில்தான் முற்காலத்தில் ஒன்பது தலை நாகம் ஒன்று வசித்து வந்தது.


அந்த நாகம் கொடிய விஷமுள்ளது. லெர்னா தோட்டத்துக் காற்றை ஒருவர் சுவாசித்தாலும் மரணமடைவர் என்னும்படி, அதன் விஷம் சுற்றிலும் காற்றிலே பரவியிருந்தது. தோட்டத்தின் நடுவில் ஆழங்காண முடியாத சேறு நிறைந்த மடு ஒன்று இருந்தது. அதிலே இருந்துகொண்டு அந்நாகம் செய்து வந்த ஆர்ப்பாட்டத்துக்கு அளவேயில்லை. அது எத்தனையோ ஆயிரம் உயிர்களைப் பலி வாங்கி யிருந்த்தால் மக்கள் அதைப்பற்றி அஞ்சிக்கொண்டேயிருந்தனர். அதை எவராலும் அதுவரை வதைக்க முடியவில்லை. ஏனெனில், அதன் ஒன்பது தலைகளில் ஒரு தலையை வெட்டினால், உடனே ஒன்றுக்குப் பதிலாக இரண்டு தலைகள் முளைத்துவிடும்! மேலும், ஒன்பது தலைகளில் ஒரு தலை சாகாவரம் பெற்றது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/23&oldid=1033631" இலிருந்து மீள்விக்கப்பட்டது