பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

27

தளைச் செருப்புகளும் பாறைகளின் மீது மோதும் பொழுதெல்லாம் ‘டனார், டனார்’ என்று ஒலித்துக் கொண்டிருந்தன. மலைப்பாதைகளிலும், பாறைகளிலும், கழனிகளிலும் ஓடியதில் மான் களைப்படையவில்லை. ஹெர்க்குலிஸும் சளைக்கவில்லை. இரவு நேரத்தில் மட்டும் அவனும் மானும் ஓய்வெடுத்துக் கொண்டனர். மறு நாள் பொழுது புலர்ந்ததும், மான் அவனைத் திரும்பிப் பார்த்தது. அவனும் அதைப் பார்த்து ஓடலானான்.


இவ்வாறு நாள்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி விட்டன; ஆயினும், மான் வேட்டை முடிந்தபாடில்லை. மான் கடலோரமாக ஓடிச் சென்றது. கடலைக் கண்டதும் அது அதிலே பாய்ந்து நீந்திச் சென்றது. வில்வீரனும் அவ்வாறே குதித்து நீந்தத் தொடங்கினான். ஒன்றிலிருந்து மற்றொன்றாகப் பல கடல்களிலே, மானும் மனிதனுமாக நீந்திச் சென்றார்கள். ஓங்கியெழுந்து வீசிய அலைகளும், காற்றும், அவர்களைத் தடை செய்ய முடியவில்லை. ஐரோப்பாக் கண்டத்தை ஒரு வளையம் சுற்றிவிட்டு, இறுதியில் கலைமான் கிரீஸ் நாட்டுக்கே திரும்பி வந்தது. ஹெர்க்குலிஸும் அங்கேயே வந்து கரையேறினான்.


மான் வேட்டையில் ஓர் ஆண்டு கழிந்துவிட்டது. அதுவும் மீண்டும் ஈனோ வனத்தை அடைந்துவிட்டது. ஹெர்குலிஸ், மேற்கொண்டும் காலத்தை வீனாக்காமல் அதைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, மெல்லிய அம்பு ஒன்றை எடுத்து, மானின் முன்கால்கள் இரண்டையும் தளை செய்யும் முறையில் அதைச் செலுத்தினான். ஆகவே அதனால் மேற்கொண்டு ஓட முடியவில்லை. அது உடனே துள்ளிக் குதித்துக்கொண்ட ஆர்ட்டிமிஸின் கோயிலுக்குள் புகுந்து, தேவியின் சிலையடியில் விழுந்து சரணடைந்தது. அதன் கண்களில் இருந்து முத்துகள் போன்ற கண்ணீர்த் துளிகள் உதிர்ந்தன. அது மிகவும் களைப்புற்றிருந்தது. அதைத் தொடர்ந்து ஹெர்க்குவிஸ் ஆலயத்திலேயே அதைப் பிடித்துக்கொண்டிருக்கலாம். ஆனால், அந்தப் புனிதமான இடத்தில் அதைத் துரத்திச் செல்ல வேண்டாம் என்று கருதி, அவன் சிறிது நேரம் வெளியே தங்கியிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/31&oldid=1074311" இலிருந்து மீள்விக்கப்பட்டது