பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6. எரிமாக்தஸ் மலைப்பன்றி


நான்காவது பணிக்காக ஹெர்க்குலிஸ் ஆர்கோலிஸ் நாட்டுக்கு வெளியே போக நேர்ந்தது. ஆர்க்கேடியாப் பிரதேசத்தில் எரிமாந்தஸ் என்ற மலையில் முரட்டுக் காட்டுப் பன்றி ஒன்றிருந்தது. அதை உயிருடன் பிடித்து வர வேண்டுமென்று யூரிஸ்தியஸ் கட்டளையிட்டான். எந்தக் கொடிய விலங்கையும் ஹெர்க்குலிஸ் எளிதில் வதைத்து விடுவான் என்று அம்மன்னன் கருதி, வதைப்பதைவிடக் கடினமான வேலையைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகப் பன்றியை உயிருடன் கொண்டு வரும்டி கூறினான்.


அந்தப் பன்றி யானைக் குட்டி போல் படுத்திருந்த போதிலும், அது குதிரைகளைவிட வேகமாக ஓடக் கூடியது. அது தன் தந்தங்களைக் கொண்டு குதிரை வீரர்களைத் தாக்குவதுடன், குதிரைகளையும் குத்தி வெல்லக்கூடிய வல்லமையுள்ளது. எந்த மனிதனும் அதன்மீது ஒரு காயத்தைக் கூட உண்டாக்க முடியவில்லை. எனவே, அது எரிமாந்தஸ் மலையடிவாரத்திலிருந்த நிலங்களில் கிழங்குகளையும், வேர்களையும், விதைகளையும், கொட்டைகளையும் தோண்டித் தின்று வந்ததுடன், கழனிகளையும் பாழாக்கிவிட்டது. அதற்கு அஞ்சிக் குடியானவர்கள் எவரும் அந்தப் பகுதியில் பயிரிடச் செல்வதேயில்லை. அருகேயிருந்த வனங்களிலும் மக்கள் நடமாடுவதில்லை.


மும்முறை வெற்றி கொண்ட ஹெர்க்குலிஸ் இம்முறையும் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையுட்ன் மலைப் பிரதேசத்தை நோக்கிப் பயணமானான். வழியில் அவனுடைய விரச் செயல்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்த மக்கள் பலர் அவனை அன்புடன் வரவேற்று ஆதரித்தனர். அவனுடைய தோளிலே வில்லும், ஒரு கையிலே கதையும், முதுகிலே அம்பறாத்தூணியும், இடையிலே நன்றாக முறுக்கிய கயிறுக்ளும் இருந்தன. கயிறுகள் வலை பின்னுவதற்குரியவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/34&oldid=1033700" இலிருந்து மீள்விக்கப்பட்டது