பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

ஹெர்க்குலிஸ்

சுத்தம் செய்ய நான் இவ்விடம் வந்துள்ளேன். அரசே!’ என்று கூறினான். ஆஜியஸ் அதைக் கேட்டு ஆனந்தமடைந்து, ‘நல்லதுதான், வீர! ஆனால், அது ஒரு மனிதனால் செய்து முடிக்கக்கூடிய காரியமா என்பதுதான் சந்தேகம். நூற்றுக்கணக்கான ஆள்கள் பல மாதங்களாக அவைகளிலுள்ள குப்பைகளை அள்ளினாலும், இப்பொழுதுள்ளவைகளை விட அதிகக் குப்பைகளே குவிந்திருக்கும்!’ என்றான்.

எப்படியிருந்தாலும் நான் முயன்று பார்க்க விரும்புகிறேன். தொழுவங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து கொடுத்தால், தாங்கள் எனக்குப் பரிசாக என்ன கொடுப்பீர்கள் என்று கேட்டான் ஹெர்க்குலிஸ்.

‘பரிசா என்னிடமுள்ள ஆடுகளிலும் மாடுகளிலும் பத்தில் ஒரு பகுதியை உனக்கு அளிக்கத் தயாராயிருக்கிறேன்; அதுவும் மனமுவந்து அளிப்பேன்! என் தொழுவங்கள் சுத்தமானால் போதும்!’ என்று ஆஜியஸ் மகிழ்ச்சியுடன் தெரிவித்தான்.

உடனே ஹெர்க்குலிஸ் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் எனக்காகச் செய்ய வேண்டியது ஒன்றுதான். தொழுவங்களிலுள்ள ஆடு மாடுகளையும், மலையடிவாரத்தில் மேய்ந்துகொண்டிருப்பவைகளையும். மேல் மலைக்கு ஓட்டிச் செல்லும்படி உங்களுடைய பணியாளர்களுக்கு உத்தரவு கொடுங்கள். ஏனெனில், ஹர்க்குலிஸ் சுத்தம் செய்யத் தொடங்கினால், பூமியே அதிரும்! அதனால்தான் முன் கூட்டியே சொல்லி வைக்கிறேன்!’ என்று சொன்னான் மன்னனும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தான்.

அப்பொழுது அவன் அருகிலிருந்த அவன் புதல்வர்களில் மூத்தவனான பைலியஸ் என்பவன் ஹெர்க்குலிஸிடம் ஓடிச் சென்று, அவன் கையைப் பிடித்துக்கொண்டு, தன்னை அவனுடைய நண்பனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக் கொண்டான். மாவீரனும் அவனை அன்புடன் அனைத்துக்கொண்டு தங்கள் நட்பு நல்ல முறையில் வளருமென்று நம்புவதாகக் கூறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/42&oldid=1074314" இலிருந்து மீள்விக்கப்பட்டது