பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

ஹெர்க்குலிஸ்

அவற்றின் உருவமும் தோற்றமும் பயங்கரமாயிருந்தன. ஆயிரக்கணக்கில் அவை பறந்ததால், கதிரவனை மேகங்கள் மறைப்பது போல், அவை மறைத்து, வானத்தையும் பூமியையும் இருளடையும்படி செய்தன.

தோற்றத்தில் அவை நாரைகளைப் போலிருந்தன. அவற்றின் கால் நகங்கள் இரும்பு போன்றவை; இறகுகள் பித்தளை போன்ற உலோகத்தால் அமைந்தவை; மிகவும் கூர்மையானவை, அவை நினைத்த போது அந்த இறகுகளை எதிரிகள் மீது பாய்ச்சக்கூடிய வல்லமையும் பெற்றிருந்தன. அத்தகைய இறகுகளுடன் அவை பறக்கும் பொழுது வானத்திலே பறக்கும் முள்ளம்பன்றிகளைப் போலத் தோன்றின. அவற்றின் அலகுகள் இருப்புக் கவசங்களைக் கூடத் துளைத்துவிடக் கூடிய வலிமை பெற்றிருந்தன.

கருமேகங்களைப் போல வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பறவைக்கூட்டங்களைக் கண்டு, ஹெர்க்குலிஸ் அவை அனைத்தையும் அம்புகளால் வதைக் முடியாது என்று கருதினான்; எனினும், சிலவற்றை அம்புகளால் அடித்துத் தள்ளினால், மற்றவை அஞ்சி ஓடிவிடக் கூடுமென்றும் அவனுக்குத் தோன்றிற்று. உடனே அவன், வில்லைக் கையிலேந்தி, தன்னிடமிருந்த விஷம் தோய்ந்த பாணங்களை உயரே பார்த்துத் தொடுத்து விடலானான். அவனுடைய வில் சிறிது நேரம் கணகணவென்று ஒலித்துக்கொண்டேயிருந்தது, அவன், பாணங்களை எடுப்பதும் விடுப்பதும் புலப்படாதவாறு, அப்பறவைகளின் மீது அம்புகளை மழையாகப் பொழிந்தான். அதனால் பல பறவைகள் மாண்டு எல்லாத் திசைகளிலும் போய் விழுந்தன.

மாண்டவை போக்க எஞ்சியிருந்த பறவைகளுள் சில, கீழேயிருந்து அம்பு தொடுத்த ஹெர்க்குலிஸைக் கண்டு, அவனைப் பழி வாங்க வேண்டுமென்று, ஒரே கூட்டமாய் அவன்மேல் விழுந்து, சிறகுகளால் புடைக்கவும், அலகுகளால் கொத்தவும் தொடங்கின. அவன் உருவமே வெளியில் தெரிய முடியாதபடி அவை அவனை மொய்த்துக்கொண்டன. அந்நிலை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/48&oldid=1033803" இலிருந்து மீள்விக்கப்பட்டது