பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. இளமைப் பருவம்

பண்டைக் காலத்துக் கிரேக்க வீரர்கள் பலரிலும் முதன்மையாகப் போற்றப்படுபவன் ஹெர்க்குலிஸ். உடல் வலிமையிலும், வீரத்திலும், ஆற்றலிலும் அவனுக்கு நிகரானவரேயில்லை. மகாபாரதக் கதையில் வரும் பீமனைப் போல, அவன் கையிலே எப்பொழுதும் ஒரு கதாயுதத்தை வைத்துக்கொண்டிருப்பான். அதைக் கண்டாலே எதிரிகள் அஞ்சி நடுங்குவார்கள. அவன் பல கொடிய மிருகங்களை அடக்கியும், அழித்தும் மக்களுக்கு உதவி செய்தவன். பல போராட்டங்களில் ஈடுபட்டு அவன் வெற்றி பெற்றவன். ஆகவே , அவனைப்பற்றிக் கிரீஸ் நாட்டில் பற்பல, கதைகள் தோன்றியிருந்தன. கிரேக்கர்கள் அவனைப் பெரிதும் போற்றி வந்தனர். கிரேக்கப் பாணர்கள் அவனுடைய வரலாற்றை மக்களுக்குப் பாடல்களாகப் பாடிக் காட்டுவதில் சலிப்படைந்ததேயில்லை. அந்தக் காலம் முதல் இன்றுவரை உலகில் மிகுந்த பலமும் விரமும் கொண்டு விளங்கும் மனிதனை, ‘அவன் ஒரு ஹெர்க் குலிஸ்!’ என்று பெருமையாகப் பேசுவது வழக்கமாகிவிட்டது. வீரர்களைத் தவிர, உறுதியாக அமைந்த பொருள்களுக்குக் கூட அவன் பெயரை வைக்கிறார்கள்,


ஹெர்க்குலிஸின் தாய் ஆர்கோலிஸ் நாட்டு அரசனுடைய மகளான அல்க்மினா என்பவள்: தந்தை, தேவர்களின் தலைவரான சீயஸ் கடவுள். ஏற்கெனவே அல்க்மினா அம்பிட்ரியன் என்ற மன்னனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள். அம்மன்னன் போர்களில் ஈடுபட்டுத் தீப்ஸ் நகருக்குச் சென்றிருந்த சமயத்தில், சீயஸ் கடவுள் அவளிடம் சென்று, அவள் கருவுற்று, வல்லமை மிகுந்த ஒர் ஆண் மகனைப் பெற வேண்டு மென்று ஆசியளித்தார். அந்தக் குழந்தை, மனிதர்கள். மட்டுமன்றி, தேவர்களையும் காக்கக்கூடிய வல்லமை, பெற்றிருக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/5&oldid=1074291" இலிருந்து மீள்விக்கப்பட்டது