பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10. திரேஸ் நாட்டுக் குதிரைகள்


க்காலத்தில் திரேஸ் நாட்டில் கொடிய மன்னன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் தயோமிடிஸ். அவனிடம் நான்கு முரட்டுப் பெண் குதிரைகள் இருந்தன. அவை புல்லே தின்பதில்லை. மனித உடல்களைக் கிழித்து நரமாமிசத்தை உண்பதே அவைகளுக்குப் பழக்கம். அரசன் அவைகளை அவ்வாறு பழக்கியிருந்தான். திரேஸ் பிரதேசத்துக் கடற்கரை அருகில், கப்பலுடைந்து உயிர் தப்பி வரும் மாலுமிகளைப் பிடித்து அவைகளுக்கு உணவாக அளிப்பது அவன் வழக்கம் மற்றும் தன்னை நாடிவரும் விவரம் தெரியாத மக்களையும் அவன் அக்குதிரைகளுக்கு இரையாகத் தள்ளி வந்தான். அந்தக் குதிரைகள் நான்கையும் ஹெர்க்குலிஸ் பிடித்து வரவேண்டுமென்பது யூரிஸ்தியஸின் எட்டாவது கட்டளை.


அதன்படி வீரன் ஹெர்க்குலிஸ் கப்பலேறித் திரேஸ் நாட்டை அடைந்தான். அங்கே குதிரைகளைப் பற்றியும், தயோமிடிஸின் கொடுமைகளைப் பற்றியும் அவன் பலரிடம் விசாரித்துத் தெரிந்துகொண்டான். குதிரைகளைப் பிடிப்பதுடன், கொடுங்கோலனான அம்மன்னனையும் தீர்த்துக் கட்டிவிட வேண்டு மென்று அவன் முடிவு செய்தான். ஆதலால், தனக்கு உதவியாக வரவேண்டுமென்று அவன் கிரேக்க வீரர் சிலருக்குச் செய்தி அனுப்பினான். அவர்கள் அனைவரிலும் அவனே மேலான விரனாயிருந்ததால், அத் தலைவனின் சொற்படி கிரேக்க வாலிபர்கள் வந்து சேர்ந்தனர். அவர்களுள் ஒருவனாக அயோஸ்ஸும் வந்திருந்தான். வீரர்கள் தேவையான ஆயுதங்களையும் கொண்டு வந்திருந்த னர்.


குதிரைகள் திரிடா என்ற நகரில், ஒரு பெரிய கட்டாந்தரையில், ஒரு கோட்டைக்குள் அடைக்கப்பட்டிருந்தன. அவைகளுக்குப் பித்தளையால் அழிகள் அமைக்கப்பட்டிருந்தன. தயோமிடிஸ் அவைகளை இருப்புச் சங்கிலிகளில் கட்டி வைத்திருந்தான்.

ஹெர் - 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/53&oldid=1033808" இலிருந்து மீள்விக்கப்பட்டது