பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12. அசுரன் ஜிரியனின் ஆடுமாடுகள்


ஸ்பெயின் தேசத்தில் டார்ட்டசஸ் என்ற பிரதேசத்தை ஆண்டுவந்த ஜிரியன் என்பவன் ஓர் அசுரன். அவனுக்கு மூன்று தலைகள், ஆறு கைகள், இடுப்புவரை மூன்று உடல்கள் இருந்தன. ஆனால், இடுப்புக்குக் கீழே இரண்டு கால்கள் மட்டும் இருந்தன. சில வரலாறுகளில் அவனுக்கு இரண்டு சிறகுகளும் இருந்தனவாகக் கூறப்பட்டிருக்கிறது. வல்லமையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அவனுக்கு நிகரானவரேயில்லை என்று அவன் புகழ் பெற்றிருந்தான். அவனிடம் ஏராளமான ஆடுகளும் மாடுகளும இருந்தன. அவை யாவும் எளிதியா என்ற ஒரு தீவில் மேய்ந்துகொண்டிருந்தன. அவைகளிடம் என்ன விசேடம் என்றால், அவை யாவும் ஒரே சிவப்பு நிறமானவை, அழகில் அவைகளுக்கு ஈடான பிராணிகள் வேறில்லை. அவைகளை மைசீனுக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பது ஹெர்க்குலிஸுக்கு யூரிஸ்தியஸ் அளித்த பத்தாவது பணி.


ஹெர்க்குலிஸ் இந்தத் தடவை நெடுந்தூரம் கடலில் யாத்திரை செய்ய வேண்டி இருந்தது; அத்துடன் ஏராளமான கால்நடைகளையும் கொண்டு வர வேண்டியிருந்தது. ஆகவே, அதற்கேற்ற பெரிய கப்பலை ஏற்பாடு செய்வதற்குப் பதிலாக, அவன் ஹீலியஸ் என்று அழைக்கப்பெறும் சூரிய பகவானிடம் இருந்த பொற்கிண்னம் ஒன்றை இரவலாக வாங்கிக் கொண்டு. அதைக் கடலில் மிதக்க விட்டு, அதிலேயே பயனம் செய்யத் தீர்மானித்தான். அந்தக் கிண்ணம் மகிமை மிகுந்தது. அதில் ஒருவர் ஏறிக்கொண்டால், அந்த அளவுக்கு அது பெரிதாகும்; பலர் ஏறிக்கொண்டால், அத்தனை பேர்களுக்கும் போதிய அளவு அது விரிந்து கொடுக்கும். அதில் எத்தனை கால்நடைகளாயினும் கொண்டுவர முடியும், ஹெர்க்குலிஸ் தன் நண்பர்கள், சீடர்கள் பலரையும் அதிலேயே ஏற்றிக் கொண்டு புறப்பட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/62&oldid=1033839" இலிருந்து மீள்விக்கப்பட்டது