பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13. தங்க ஆப்பிள் கனிகள்


ஹெர்க்குலிஸ், மன்னன் ஏவிய பத்துப் பணிகளையும் நிறைவேற்றிவிட்டான்: இவைகளை முடிப்பதற்கு எட்டு ஆண்டுகளும் ஒரு மாதமும் ஆயின. பத்துப் பணிகள் முடிந்தவுடனேயே அவன் விடுதலையாகியிருக்க வேண்டும். ஆனால், வெர்னா வனத்து நாகத்தை வதைத்ததையும், ஆஜியஸ் மன்னனின் தொழுக்களைச் சுத்தம் செய்ததையும் முறையாக நிறைவேறிய பணிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று யூரிஸ்தியஸ் கூறினான். அவை முறையே ஹெர்க்குலிஸ் செய்து முடித்த இரண்டாவது, ஐந்தாவது பணிகள். நாகத்தை வதைக்கையில் ஹெர்க்குலிஸ் அயோலஸின் உதவியைப் பெற்றதால், அது அவ்வீரன் தானாகச் செய்ததன்று என்று மன்னன் வாதாடினான். தொழுக்களைச் சுத்தம் செய்ததற்கு, வீரன் ஆஜியஸ் மன்னனிடம் சம்மானம் பெற்றான் என்றும் அவன் குற்றம் சாட்டினான். இக் காரணங்களால் ஹெர்க்குலிஸ் மேலும் இரண்டு பணிகளைச் செய்து முடிக்க வேண்டியிருந்தது.

பதினோராவது பணியாக அட்லஸ் மலைச்சாரலிலிருந்த ஆப்பிள் மரத்திலிருந்து மூன்று தங்கக் கனிகளை ஹெர்க்குலிஸ் கொண்டுவர வேண்டுமென்று விதிக்கப்பட்டது. அந்த ஆப்பிள் செடி முற்காலத்தில் ஹீரா தேவியின திருமணத்தின்போது பூமிதேவியால் அவளுக்குப் பரிசளிக்கப்பெற்றதாகும். அதை ஹீரா அட்லஸ் மலைச்சாரலில் தன்னுடைய தெய்வீகத் தோட்டத்தில் நட்டு, அதற்குப் பாதுகாப்பாக ‘ஹெஸ்பிரைடுகள்’ என்ற தேவ கன்னியரை நியமித்திருந்தாள். அந்தக் கன்னியரும் ஆப்பிள் கனிகளைப் பறித்துவிடாமல் காப்பதற்காக மரத்தின் மீது எப்பொழுதும் ஒரு பெரிய நாகம் படுத்திருக்கவும் அவள் ஏற்பாடு செய்திருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/66&oldid=1074324" இலிருந்து மீள்விக்கப்பட்டது