பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14. பாதாள உலக யாத்திரை

ஹெர்க்குலிஸுக்கு விதிக்கப்பெற்ற பன்னிரண்ரண்டாவது பணியில், அவன் பாதாள உலகமாகிய புளுட்டோவின் நாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது. கிரேக்கர்கள் யமனைப் புளுட்டோ என்று அழைத்து வந்தார்கள். அவனுடைய உலகில் சூரியனுடைய ஒளியே கிடையாது ; மங்கலான இருள்தான் படர்ந்திருக்கும். பூமி தேவியின் மகளான பெர்சிபோனி அவனுடைய இராணி. சுவர்க்கமும் நரகமும் அவனுடைய பாதாள உலகில்தான் இருந்தன. நரகத்திற்குக் காவலாக ஒரு பெரிய நாய் இருந்து வந்தது. அதன் பெயர் செரிபரஸ். அதற்கு மூன்று பெருந்தலைகளும், பாம்புபோல் நீண்டு, முள்கம்பிகளைப் போன்ற கூர்மையுமுள்ள ஆணிகள் நிறைந்த வாலும் உண்டு. பார்க்க அச்சம் தருவதாய், நரக வாயிலில் நின்றுகொண்டு. அது மாண்டவர் ஆவிகளைக் காத்து வந்தது. அந்த நாயைப் பிடித்து வர வேண்டும் என்பது யூரிஸ்தியஸ் கட்டளை.


எல்லோரும் பாதாள உலகுக்குச் சென்று வர முடியாது. மகா வீரர்களுக்கும் அது அரிது. எனவே, ஹெர்க்குலிஸ் முதலில் தேவ ஆராதனைகளாலும், தவத்தினாலும், விரதங்களினாலும் தன்னைத் தயாரித்துக்கொண்டான். இவைகளுக்காக அவன் எலியுசிஸ் என்ற இடத்தில் சிறிது காலம் தங்கியிருந் தான்.


ஆர்க்கேடிய நாட்டிலுள்ள மலைகளினிடையே. பூமியிலிருந்து ஓர் ஊற்றுப் பெருகி ஆறாக ஒடுவதாயும், அது சிறிது தூரத்திற்கு அப்பால் மீண்டும் பூமிக்குள்ளேயே மறைந்துவிடுவதாயும், அது மறையும் இடத்திலிருந்து பாதாள உலகுக்குச் செல்ல முடியும் என்றும் அவன் கேள்வியுற்று, அங்கே சென்றான். அந்த ஆற்றின் நீர் கடுமையான விஷம் கலந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/72&oldid=1034801" இலிருந்து மீள்விக்கப்பட்டது