பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

75

உயிர் துறந்தான். அவளும், அவன் பேச்சை நம்பி, அதை வாங்கி மறைத்து வைத்துக் கொண்டாள். உண்மை என்னவென்றால், சென்டார் தன்னைக் கொன்ற விஷத்தைக் கொண்டே ஹெர்க்குலிஸையும் கொல்வதற்காக ஆவளை அவ்வாறு ஏமாற்றி விட்டான்.


புது மணத்தம்பதிகள் வீடு திரும்பியபின் விருந்துகளும் கேளிக்கைகளும் பல நாள்கள் நடந்தன. தியனைரா சென்டாரிடம் பெற்றிருந்த மருந்தை ஒரு சிமிழில் அடைத்துப் பெட்டியில் வைத்திருந்தாள். நாள்கள் செல்வச் செல்ல, அவள் அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், அதை அடியோடு மறந்திருந்தாள். அவளும் ஹெர்க்குலிஸும் பல்லாண்டுகள் அன்புடன் இல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தனர். அவளுக்கு நான்கு பிள்ளைகளும், ஒரு பெண்ணும் பிறந்தனர்.


ஒரு சமயம் ஹெர்க்குலிஸ், தான் அடைந்த வெற்றிகளுக்காக, சீயஸ் கடவுளுக்குப் பலிகள் கொடுத்து யாகம் நடத்த வேண்டுமென்று, ஒரு மலை மேல் ஓம குண்டங்களும் பலி பீடங்களும் அமைத்திருந்தான். யாகத்திற்கு வேண்டிய சாமக்கிரியைகள் பலவும் தயாராயிருந்தன. அப்பொழுது ஹெர்க்குலிஸ் யாகத்தில் தான் அணிந்துகொள்ள வேண்டிய பட்டு உடையைத் தியனைராவிடம் போய் உடனே வாங்கி வரும்படி ஒரு தூதனை அனுப்பி வைத்தான்.


தூதன் சென்ற சமயத்தில், தியனரா ஹெர்க்குலிஸைப் பற்றித் திடீரென்று வருத்தமடைந்து புலம்பிக்கொண்டிருந்தாள் நாட்டிலே அழகு மிகுந்த பெண்கள் பலரும் அவனிடம் காதல் கொண்டிருந்தனர். அவனுடைய உடலமைப்பும் அழகும் பெண்களின் கண்களுக்குப் பெருவிருந்தாக இருந்தன. இக்காரணங்களால் அவன் முற்காலத்தைப் போல் அந்தச் சமயத்தில் தன்னிடம் அதிக அன்பு காட்டவில்லை என்பதே அவள் வருத்தத்திற்குக் காரணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/79&oldid=1034965" இலிருந்து மீள்விக்கப்பட்டது