பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

77

நிறைய மதுவையும் வார்த்தன். சுற்றிலும் தூப தீபங்களின் நறுமணம் கமழ்ந்துகொண்டிருந்தது. அப்பொழுது அவன் திடீரென்று உரக்கச் சத்தமிட்டு அலறினான். தியனைரா அவனுடைய உடையிலே தேய்த்திருந் விஷ் மருந்து உடையில் சூடேறியவுடன் வேலை செய்யத் தொடங்கிவிட்டது. அந்த விஷம் கொடிய வெர்னா நாகத்தின் விஷமல்லவா! அது அவனுடைய உடல் முழுவதும் பரவி விட்டது! அது அவன் அங்கங்களை அரித்து. எரித்துக் கொண்டிருந்தது. வெற்றி வீரனாகிய ஹெர்க்குலிஸ் அவ்விஷத்தின் கொடுமையையும், வேதனையையும் தாங்க முடியாமல் கதறினான். அவன் பட்டுச் சட்டையைக் கழற்றி எறியமுயன்றான். ஆனால், அதை இழுக்கும் பொழுது அவனுடைய உடலின் சதைகளும் சேர்ந்து வந்தன. உடலில் ஓடிக் கொண்டிருந்த இரத்தம் கொதித்துக் கொந்தளித்துக்கொண்டிருந்தது. அவன் அருகிலிருந்த ஓர் ஓடையிலே குதித்து. நீருள் மூழ்கிப் பார்த்தான். அதனால் உடலின் எரிவு அதிகமானதைத் தவிர வேறு பயனில்லை. ஓடை நீரும் கொதித்து, அதிலிருந்து ஆவி வரத் தொடங்கிவிட்டது!


அவன் எழுந்து சென்று. அங்குமிங்கும் ஓடினான் அப்பலிபீடங்களைத் தகர்த்தெறிந்தான்; வழியிலே தென்பட்ட மரங்களையெல்லாம் வேருடன் பறித்து வீசினான். வழியில் கூடியிருந்த பூசாரிகளும், மக்களும் அவனுடைய அவல நிலையைக் கண்டு துடிதுடித்தனர். ஆனால், யாருக்கும் என்ன நேர்ந்தது, எப்படி நேர்ந்தது என்பது விளங்கவில்லை.


தியனைரா இரண்டாவதாக அனுப்பிய குதிரை வீரன், யாக சாலைக்கு வந்து பார்க்கையில், காலம் தாழ்ந்துவிட்டது என்பதை உணர்ந்து அங்கு தான் கண்ட காட்சியை அப்படியே போய் அவளிடம் தெரிவித்தான். அவள் தானே தன் கணவனுக்கு யமனாகத் தோன்றியதை எண்ணி வருந்தி, அவனுடைய வாளாலேயே தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/81&oldid=1034993" இலிருந்து மீள்விக்கப்பட்டது