பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
70

சிறுவாய் மலர்ந்த "பூவோபூ” பாடலில் எனது இயற்பெயர் அமைந்துள்ள இடங்கள் ஏழு என்னும் எண்ணிக்கை, எனது ஏழு பருவங்களின் அறிவிப்பு போன்றுள்ளது.

உறுப்புகள் ஏழு

இந்த ஏழு எண்ணிக்கைகொண்டு மற்றொரு ஏழு அமைப்பையும் நான் கூறவேண்டும். எனது உறுப்புகள் ஏழு அவை:

1. காம்பு 2. புல்லி 3. அல்லி 4. சூலகம் 5. மகரம் 6. தாது 7. தேன்.

தற்காலச் செடியறிவியல் நூலார் இவ்வுறுப்புகளைக் கண்டறிந்து பெயர் வகுத்துள்ளனர். ஆனால், பண்டைத் தமிழ் நூல்களில் இவ்வுறுப்புகளைக் குறிக்கும் சொல்லமைப்புகள் உள்ளன. அவை தமிழ்ச்சான்றோரது செடியியல் அறிவைப் புலப்படுத்துகின்றன. அவற்றை முறையாகச் சொல்வேன்:

காம்பு என்பது என்னை ஏந்தி நிற்கும் உறுப்பு. இது கால்போன்று ஊன்றி நிற்பதால் 'கால்' எனப்படும். "அனிச்சப் பூ கால் களையாள்"40-எனத் திருக்குறள் காட்டுகின்றது. இக்காம்பை எனது இனவேறுபாட்டிற்கு ஏற்ப, தாள், தண்டு எனவும் குறிப்பர். "காம்பு வேய் மலர்த்தாள்"41 - எனும் சூடாமணி நிகண்டு கொண்டு இதனை அறியலாம்.

புல்லி என்பது புற இதழ். புல்லுதல் - தழுவுதல், அணைத்தல். என்னை அணைத்து மூடி இருப்பது புல்லி. வெயில், மழைகளிலிருந்து என்னைப் பாதுகாக்கும் காப்பு உறுப்பு. இது மெருகில்லாமல் சுரசுரப்பாக இருக்கும். பெரும்பகுதி பசுமை நிறமானது. நிகண்டுகள் இதனை 'புல்லி புறவிதழ்'42 எனப் புல்லியாகக் குறிக்கும்.


40 குறள்: 1115

41 குடா நி : மரப்பெயர் : மகர வெதுகை : 4 : 4,
42 பிங், தி : 2815.