பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
72


தேன்-இஃது என சுவையுள்ள உறுப்பு 'நறை, நறா. கள், மட்டு, தேறல்' எனும் பல நிலைப் பெயர்களைப் பெறும். இஃது எனது புகழ் உறுப்பு எனலாம்.

இவ்வேழு உறுப்புகளும் நிறைவாக அமைந்தால் என்னை 'நிறைபூ' என்பர். ஒன்றிரண்டு குறைந்தால் 'குறை பூ' என்பர். உங்களிலும் உறுப்புக் குறையுடையோர் உளரன்றோ!

இக்குறைகளைக்கொண்டு என்னில் பால் பகுப்பு அமை கின்றது. என்னில் ஆண்பால் உண்டு; பெண்பால் உண்டு; அலியும் உண்டு; மலடும் உண்டு. ஆண் உறுப்பாகிய மகரம் இல்லாத நான் பெண். சூலகமாம் பெண் உறுப்பில்லாத நான் ஆன். இரண்டும் இல்லாத நான் அலி. தாது இல்லாத நான் மலடு. இக்கருத்து இக்கால அறிவியலாரும் வகுத்தது.

தமிழ் நூல்கள் இப்பாகுபாட்டை மரத்தின்மேல் ஏற்றி,
“அகம் காழ்த்திட்டது ஆண்மரம், புறக்காழ் பெண்மரம்,
விதியுள் இவ்விரண்டும் இல்லா வெளிறு அலியும் ஆகும்"49

-என்றனர்.

இவ் ஏழு உறுப்புகளில் காம்பும் புல்லியும் எனக்கு உணவூட்டித் தாங்கியும், ஊறு வராமல் காத்தும் உதவும் செவிலியர் ஆவர். உங்களில் தொண்டால் நாடு காப்போரையும், உழைப்பால் உயர்த்துவோரையும் தாழ்வாக அன்றோகருதுகின்றீர்கள்! அந்த வாடைக் காற்றை என் மேலும் வீச விட்டனர். என்னைக் காத்த புல்லியை எனக்கு ஒரு குறைபாடாகவும் -ஏன் களங்கமாகவும் குறித்தனர்.

நெல்லின் உள்ளே பிடித்த பாலை, அருமணியான அரிசி யாக உருவாக்க உதவிய காப்புக் கைகளை உமி என்று ஊதி விடுவீர்கள் அன்றோ? நெல்லுக்கு உமி ஒரு குறையாம். இத்தொடர்பில் எனது புற இதழாகிய புல்லியும் குறையாம், புல்லிக்குப் 'புன்மை’ என்னும் தாழ்வாக்கும் அடைமொழியைக் கொடுத்துப் "புல்லிதழ்" என்றனர். புல்லிதழ் ஆக்கி,

'நெல்லுக்கு உமியுண்டு; நீருக்கு துரையுண்டு;
புல்லிதழ் பூவிற்கும் உண்டு'- என்று,
"நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக்கொளல்வேண்டும்”50 என நல்லவர்
49 குடா: நி: மரப்பெயர் 57.50 நாலடி: 221.