பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


32 1806 ______________________________________________________________________________________ செய்வது " என்று எண்ணித் தயங்கியது. ஆயினும், மாவீரன் திப்புவின் மதிப்பிற்குரிய குடும்பத்தினரையும் உற்றார் உறவினர்களையும் கல்கத்தாவுக்கு அருகே கொடிய மலேரியா நோயும் காடுறை விலங்குகளும் நிறைந்த காட்டிலே ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் "வாழ்விலே சாவை"க்கான அனுப்பிவைத்தது "நாகரிக" வெள்ளை ஆட்சி ; புரட்சி வீரர்களோடு உறவு கொண்ட எவரையும் எக்காலத்திலும் இராணுவத்தில் சேர்க்கக் கூடாதென்று தடையும் விதித்தது.

இவ்வாறெல்லாம் கற்பனைக்கும் எட்டாத அடக்கு முறைகளைப் புரிந்தும் வேலூர்ப் புரட்சியின் எதிரொலிகளை வெள்ளை அரசாங்கத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவ்வொரு நாள் நடைபெற்ற பூகம்பப் புரட்சியின் வேகம் மட்டும் அடங்க அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று என்பதைச் சென்னை இராணுவ வரலாற்றையும் இம்மாநிலத்தில் கடந்த காலத்தில் ஆங்கிலேயர் ஆண்ட ஆட்சியின் வரலாற்றையும் துருவி ஆராய்வார் உணர்தல் ஒருதலை.

வேலூர்ப் புரட்சியைப்பற்றி மக்கள் மனத்தில் வெறுப்புண்டாக்கும் வகையில் எத்தனையோ கதைகளைக் கட்டிவிட்டது பறங்கி ஆட்சி. ஆனால், அவையனைத்தும் காலப்போக்கில் அப்புரட்சியின் தூய்மையையும் ஏகாதிபத்திய வெறியர்களின் பொய்யையும் காட்டவே பயன்பட்டன