பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

1806



அப்படித்தான் இருந்திருக்கிறது. ஆனால், அவற்றை இனியேனும் தொலைத்தாக வேண்டும்; ஏற்கெனவே அவை ஒழிக்கப்பட்டு வருகின்றன. சென்னைக் கவர்னர் பென்டிங்கு பிரபு இவ்வுத்தரவுகளை ஒழித்துக் கட்டி ஆணைகள் பிறப்பிக்குமாறு இராணுவப் பெருந்தலைவனுக்குக் கட்டளையிட்டுள்ளார். இச்செயல் இனி இத்தகைய புரட்சிகள் தோன்றாது காப்பாற்றுமென்று நம்புகிறேன். ஆனால், நாம் வேலூர்ப் புரட்சியின் போது இந்தியாவின் இப்பகுதியைத் தலை முழுகிவிடக்கூடிய நிலையிலேதான் இருந்தோம். இத்தகைய படுமோசமான உத்தரவுக்குக்குக் காரணம் மேஜர் பியர்சி என்னும் இராணுவத்தலைவன்தான் என்பது இப்பொழுது எனக்குத் தெரிகிறது."


வேலூர்ப் புரட்சி முடிவு பெற்றதும் பிரிட்டிஷ் ஆட்சி சத்திய சோதனை நடத்தித் தன்னைதான் ஆராய்ந்தது; அதன் பயனாகத் தான் செய்த தவறுகளை உணர்ந்தது. அதன் விளைவாகச் சென்னைக் கவர்னர் பென்டிங்கு பிரபுவும் இராணுவப் பெருந்தலைவனும் புரட்சிநடந்த ஓராண்டு கழித்துத் தங்கள் பதவியினின்றும் நீக்கப்பட்டார்கள். அச்சமயத்தில் தாமஸ் பாரி, தம் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் மீண்டும் ஒரு முறை பின் வருமாறு குறித்துள்ளார். 'பென்டிங்கு பிரபு பதவியிழந்தமையால் பலர் வருந்தினர் என்று யான் ஒரு போதும் சொல்ல முடியாது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/36&oldid=1138859" இலிருந்து மீள்விக்கப்பட்டது