பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுடரும் சோதியும்
39
 

இரண்டு பக்கங்களில் இயம்புகிறது. அவ்வாறே தி லிசனர் பத்திரிகை 1806ல் தமிழகத்தின் வடவெல்லையில் வெடித்தெழுந்த புரட்சியின் சரித்திரச் சிறப்பை வலியுறுத்தும் வகையில், வேலூர்க் கோட்டையின் படத்தையும் அக்கோட்டையிலே எழுந்த எரிமலைக் குமுறலை ஆயுத பலத்தால் அடக்கிய ஆங்கிலத் துரைமகன் கில்லெஸ்பியின் (Gilespie) படத்தையும் சேர வெளியிட்டுள்ளதைச் சிந்திக்கச் சிந்தை குளிர்கிறது! ஆம் ஒருபுறம் ஆராய்ச்சி வேட்கையும் இன்னொரு புறம் கடந்த கால சாதனைகளே இன்றும் எண்ணி அடையும் இன்பமும் இறுமாப்பும் எழுகின்றன. ஆனால், ஒன்று : ஆங்கில ஆட்சி கலகலத்துப் போகும் வகையில், பேர் ஊர் தெரியாத எண்ணற்ற சிப்பாய்கள் வேலூரில் நிகழ்த்திய புரட்சியை நாமும் மறந்தோம்; நம் அரசாங்கமும் மறந்தது; மறந்து, வேலூரில் வெற்றித்தூண் எழுப்பி நன்றி பாராட்டும் கடமையையும் நழுவவிட்டு விட்டது. ஆனால், இலண்டன் பத்திரிகையாகிய "தி லிசனர் தன் ஆங்கிலச் சாதியின் ஆட்சியை நிலைகநாட்ட அரும்பாடுபட்ட கில்லெஸ்பியின் உருவத்தை வேலூர்க் கோட்டையோடு இணைத்து வைத்துப் பார்ப்பதில், சாம்ராஜ்யத்தை இழந்த இன்றைய நிலைமையிலும் பெருமை கொள்கிறது! ஆளும் சாதிக்கும் அடிமைப்பட்ட சாதிக்கும் உள்ள வேறுபாடு இதுதான் போலும்!.