பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6
1806
 


இயற்கை அழகும் இலக்கியச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் ஒரு சேரப் படைத்து வட ஆர்க்காட்டு மாவட்டத்தின் தலை நகராய் விளங்கும் புகழ் பெற்ற வேலை மாநகரில் போர்க்கலை நுட்பங்களும் கவின் கலைச் சிறப்புகளும் கலந்து இலங்கும் பேறு பெற்றுத் திகழும் வேலூர்க் கோட்டையில்-அயல் ஆட்சிக் கொடுமையால் செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகிக் கிடந்த அஞ்சத்தக்க சூழ்நிலையில் நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்!” என்று தமிழ் நாட்டு மக்களின் சுதந்தர ஆவேசம் பிரிட்டிஷ் படையிலிருந்த கணக்கற்ற தமிழ் வீரர்கள் வாயிலாகப் பொங்கி எழுந்த விழுமிய நிகழ்ச்சியே வேலூர்ப் புரட்சி.

தென்பாண்டித் திருநாட்டில் 18 - ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வீறுகொண்டெழுந்த பாளையக்காரரின் சுதந்தரப்போர், 1801-ஆம் ஆண்டில் தமிழகத்தின் மானங்காத்த மருது பாண்டியர்களைத் தூக்கிலிட்டதோடு முடிவுற்றது. அவ்வீர சகோதரர்கள் மறைந்த சில மாதங்களுக்குள் அவர்களையும் தமிழ்த்திரு நாட்டையும் காட்டிக்கொடுத்து அடிமை வாழ்வு வாழ்ந்த ஆர்க்காட்டு நவாபுகளின் கடைசி மன்னனாகிய உமதுத்-உல்-உமரா மரணமடைந்தான். அவனுக்குப் பின் வாள் முனையின் வலியின்றியே அவன் பரம்பரையைச் செல்லாக் காசாக்கியது ஆங்கில வல்லரசு.