பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப்பாயிரம்

(௫)



துணர்த்துவலென் றந்நூல்களில் கிடந்தவாறன்றி யதிகார வகைமையான் முறைப்படச் செய்தலை யெண்ணி —

எழுத்துஞ் சொல்லும் பொருளு நாடி — (எ-து) அவ்விலக்கணங்களு ளெழுத்தினையுஞ் சொல்லினையும் பொருளினையு மாராய்ந்து -

போக்கறு பனுவல் — (எ - து) பத்துவகைக் குற்றமுந் தீர்ந்து முப்பத்திரண்டுவகை யுத்தியோடு புணர்ந்தவிந் நூலுள்ளே-

மயங்கா மரபினெழுத்துமுறை காட்டிப் புலந் தொகுத்தோனே — (எ-து) அம்மூவகை யிலக்கணமும் மயங்காமுறைமையாற் செய்கின்றமையின் எழுத்திலக்கணத்தை முன்னர்க் காட்டிப் பின்ன ரேனை யிலக்கணங்களை யுந் தொகுத்துக் கூறினான் -

நிலந்தரு திருவிற் பாண்டியனவையத்து — (எ - து) மாற்றாது நிலத்தைக் கொள்ளும் போர்த்திருவினையுடைய பாண்டியன் மாகீர்த்தி யவையின் கண்ணே -

அறங்கரை நாவினான்மறை முற்றிய வதங்கோட்டாசாற் கரில்றபத் தெரிந்து — (எ-து) அறமே கூறு நாவினையுடைய நான்கு வேதத்தினையு முற்றவறிந்த வதங்கோ டென்கிறவூரி லாசிரியனுக்குக் குற்றமற வாராய்ந்து கூறி -

மல்குநீர் வரைப்பி னைந்திர நிறைந்த தொல்காப்பியனெனத் தன் பெயர் தோற்றி — (எ-து) கடல் குழ்ந்தவுலகின் கண்ணே ஐந்திர வியாகரணத்தை நிறைய வறிந்த பழையகாப்பியக்குடியி னுள்ளோனெனத் தன்பெயரை மாயாமை நிறுத்தி -

பல்புகழ் நிறுத்த படிமையோனே — (எ-து) பல்புகழ்களையு மிவ்வுலகின் கண்ணே மாயாமை நிறுத்திய தவவேடத்தை யுடையோ னென்றவாறு. —

இருந்து தமிழைச் சொல்லுமெனக் கொள்ளுகையினாலே பொருந்திய நாடெனக் கண்டெண்ணி யாராய்ந்து தன்னூலுள்ளே தொகுத்தான் அவன் யாரெனி னவையின் கண்ணே கூறி யுலகின் கண்ணே தன் பெயரை நிறுத்திப் புகழை நிறுத்தின படிமையோனென்க. இப்பாயிரமுஞ் செய்யுளாதலி னிங்கன மாட்டுறுப்பு நிகழக் கூறினார். இதற்கிங்ஙனங் கண்ணழித்தலுரையாசிரியர் கருத்தென்ப தவ்வுரையானுணர்க. இனி மங்கல மரபிற் காரியங்கள் செய்வார் வடக்குங் கிழக்குநோக்கியுஞ் சிந்தித்து நற்கருமங்கள் செய்வாராதலின், மங்கலமாகிய வத்திசையை முற் கூறினார். இந்நூனின்று நிலவுதல் வேண்டித் தென்புலத்தார்க்கு வேண்டுவன செய்வார், தெற்கு மேற்கு நோக்கியுங் கருமங்கள் செய்வாராதலிற் றென்றிசையைப் பிற்கூறினார். நிலங்கடந்த நெடுமுடி யண்ணலை நோக்கி யுலகந் தவஞ்செய்து வீடுபெற்ற மலையாதலானும், எல்லாருமறியப்படுதலானும், வேங்கடத்தை யெல்லையாகக் கூறினார். குமரியுந் தீர்த்தமாகலி னெல்லையாகக் கூறினார்.