பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/2

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப்பாயிரம்

நிலமண்டிலவாசிரியப்பா.


மணிநீர்ப் புவியின் வளஞ்சுரந் தொளிரு
மணிநீர்த் தில்லை யாடகப் பொதுவிற்
பனிமலை மங்கை பார்த்துளங் களிப்பத்
தனிநடங் குயிற்றுஞ் சம்பு நம்பெருமான்
றமருகப் பறைக்கண் அஇ உணுவென்
றமர்தரு சூத்திர மாதியீ ரேழ்பெற
வடமொழிக் கியல்பா ணிநிமா முநிக்குத்
திடமுற நன்கு தெரித்தமை போல
விந்தமும் வேலையும் வீறுபோய்க் குன்றக்
கந்தமென் கமலக் கரத்தினை விதிர்த்த
அருந்தவக் கொள்கை யகத்திய முநிக்குத்
திருந்திசை நுணுக்கச் செந்தமி ழியலினைச்
செப்பின னம்முனி தேர்ந்துள நிறீஇ
யொப்பிறன் பெயர்கொ ளொருநூ லியற்றி
யீரறு சீடரு மியல்வல ராகச்
சீருட னோதினன் றிகழ்தரு மவருண்
முதன்மா ணவனென முந்நீ ருலக
மிதமொடு புகல வினிதுவீற் றிருந்தங்
கொல்காப் பெரும்புக ழுற்றுமீ தோங்கிய
தொல்காப் பியமுநி துலங்கு தன்பெயரி
னியற்றிய தொல்காப் பியமெனு மொருநூ
னயத்தகு மளவையாய் நண்ணுவ தன்றியுங்
கோவை யார்திருக் குறள்சிந் தாமணி
தேவியற் சங்கச் செய்யுள்க ளாதி
யிலக்கி யங்களுக் கிலக்கண மாகியும்
புலப்படு மூலமும் புகலதற் கிணங்க
உச்சிமேற் புலவ ருவந்து கொடெய்வ
நச்சினார்க் கினியர்செய் நல்லுரை யதுவுங்
கரலிகி தங்களிற் காணுறு பிழையினைச்
சரதமொ டுணர்ந்து சால்புறத் திருத்தி
யச்சிற் பதிப்பித் தருளுக வென்றே
யிச்சித் துணர்வுடை யோர்சில ரியம்பலின்
விழுப்ப மொடுலகின் மேவுற விளங்க
வெழுத்ததி காரத் தியலொன் பானுங்
காண்டகு மச்சிற் கலப்புறச் செய்தனன்
மாண்டரு தாமரை மலரா திகளின்
புதுமணம் பரப்பிப் புறந்திரிந் தயரு
மதுகரத் தொகுதியை வருகெனப் பணித்துத்
தாதுறு கமலத் தண்ணற வருத்தித்
தீதரு பகலிற் செவ்விதிற் புரந்து
நள்ளிருட் பொழுது நண்ணிய காலைக்
கொள்ளைகொள் குமுத மலர்த்தேன் குடிப்பித்துத்
துவர்க்கடற் புவியி னுறுமிர வலரை
நிவப்புறு புகழெனு நேரிழை தன்னைத்
தூதென விடுத்துத் தொக்குற விளித்தங்
காதர வோடு மலர்மு கங்காட்டி
மற்றொரு பாற்செலா வகைபொரு ளளித்து
முற்றும் புரக்கு முதிர்கொடை யாளரிற்
றுன்னிய வாவியுந் துதைமலர்ச் சோலையு
மன்னிநல் வளந்தரு மழைவை மாநகரான்
சிவமறை யோர்குலஞ் சீர்பெறத் தோன்றிய
தவநிறை தருமறைச் சைவசி காமணி
யுடையா னுடைப் பொருளுறு மிருபொருளு
மிடையறா தொன்றுமென் றெழின்மறை முடிவின்....