பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(௨)

தொல்காப்பியம்




“ஈவோன் றன்மை யீத லியற்கை,
கொள்வோன் றன்மை கோடன் மரபென
வீரிரண் டென்ப பொதுவின் றொகையே”

என்னுமிதனானறிக.

ஈவோர்- கற்கப்படுவோருங் கற்கப்படாதோருமென விருவகையர். அவருட் கற்கப்படுவோர் நான்கு திறத்தார்.

“மலை நிலம்பூவே துலாக்கோ லென்றின்ன,
ருலைவி லுணர் வுடையோர்.”

என்னுமிதனுள் மலையே;

“அளக்க லாகாப் பெருமையு மருமையு,
மருங்கல முடைமையு மேறற் கருமையும்,
பொருந்தக் கூறுப பொச்சாப் பின்றி”

,

“நிலத்தி னியல்பே நினைக்குங் காலைப்
பொறையுடை மையொடு செய்பாங் கமைந்தபின் ,
விளைதல் வண்மையும் போய்ச்சார்ந் தோரை,
யிடுதலு மெடுத்தலு மின்னண மாக,
வியையக் கூறுப வியல்புணர்ந் தோரே”.


“பூவின தியல்பே பொருந்தக் கூறின்
மங்கல மாதலு நாற்ற முடைமையுங்
காலத்தின் மலர்தலும் வண்டிற்கு ஞெகிழ்தலுங்
கண்டோ ருவத்தலும் விழையப் படுதலு
முவமத் தியல்பி னுணரக் காட்டுப.”


“துலாக்கோ லியல்பே தூக்குங் காலை
மிகையினுங் குறையினு நில்லா தாகலு
மையந் தீர்த்தலு நடுவுநிலை மையோ
டெய்தக் கூறுப வியல்புணர்ந் தோரே.”

-என நான்குங் கண்டு கொள்க.

இனிக் கற்கப்படாதோர் நான்கு திறத்தார்.

“கழற்பெய் குடமே மடற்பனை முடத்தெங்கு
குண்டிகைப் பருத்தியோ டிவையென மொழிப.”

இதனுட் கழற்பெய் குடமாவது - கொள்வோ னுணர்வு சிறிதாயினுந் தான் கற்றதெல்லாமொருங்குரைத்தல்.

மடற்பனையென்பது - பிறராற் கிட்டுதற்கரிதாய் யினிதாகிய பயன்களைக் கொண்டிருத்தல்.

முடத்தெங்கென்பது - ஒருவர் நீர்வார்க்கப் பிறர்க்குப் பயன்படுவது போல் ஒருவர் வழிபடப் பிறர்க்குரைத்தல்.

குண்டிகைப் பருத்தியென்பது - சொரியினும்வீழாது சிறிது சிறிதாக வாங்கக் கொடுக்குமதுபோலக் கொள்வோனுணர்வு பெரிதாயினுஞ் சிறிதுசிறிதாகக் கூறுதல்.

இனி.

“ஈத லியல்பே யியல்புறக் கிளப்பிற்
பொழிப்பே யகல நுட்ப மெச்சமெனப்
பழிப்பில் பல்லுரை பயின்ற நாவினன்
புகழ்ந்த மதியிற் பொருந்து மோரையிற்
றிகழ்ந்த வறிவினன் றெய்வம் வாழ்த்திக்
கொள்வோ னுணர்வகை யிறந்தவன் கொள்வரக்
கொடுத்தல் மரபெனக் கூறினர் புலவர்”

-இதனானறிக.

இனிக் கொள்வோருங் - கற்பிக்கப்படுவோருங் கற்பிக்கப்படாதோருமென விருவகையர். அவருட் கற்பிக்கப்படுவோ ரறுவகையர்.