பிறப்பும் கல்வியும்.
மாயிரு ஞாலம் வழங்கும் கொல்லம்
ஆயிரத்து நாற்பத் தெட்டாம் ஆண்டினில்,
அளகையம் பதியினில் ஆவணி அத்தத்தில்
வளமுள என்மனை மாண்புறப் பிறந்தேன்.
சின்னாள் முன்னர்த் திருக்குற் றாலம்
மன்னிய என்பிதா மகிழ்வொடு வந்துயான்
பிறக்கு முன்னரென் பெரிய தந்தையை
இறக்கக் கொடுத்ததால் இடர்க்கட லாழ்ந்தவென்
பாட்டனும் பாட்டியும் பட்ட துயரினை
ஓட்டிடக் கருதி “உம்மகன் பெரும்புகழ்
பதம்பெற மீண்டும் பாரினிற் பிறந்துளன்;
சிதம்பரம் என்று செப்பிடும்” என்ன,
மேலோன் பெயரால் விளம்பினர் என்னை.
மேலோன் என்றே மேன்மையொடு வளர்த்தனர்.
எளியேன் பிறந்தபின் இயன்றன பற்பல.
களியேன் கூறி காரணம் தற்புகழ்.
ஆறாம் வயதினில் அறிவை வளர்த்திடும்
ஆறாம் பள்ளியில் அமர்த்தினன் தந்தை.
விழையுநற் றமிழினைப் பழையநன் முறையில்
விழைதர எனக்கு விளம்பிய ஆசான்
பாண்டியன் ஒருவன் பண்புடன் வாழ்ந்த
[1]பாண்டிய புறத்தினிற் பழமையா நின்று
மிகநலம் புரியும் வேளாண் குலத்தில்
தகவொடு தோன்றிய சான்றோன்-பெரியோன்;
- ↑ பாண்டியபுறம் - குறுக்குச்சாலை என்னும் ஊருக்கு அருகிலுள்ள ஒரு கிராமம்.
6