பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

வக்கீல் தொழில் புரிந்தமை.


என்னுளம் மதிக்கும் ஏசுவின் வருடம்
தொன்னூற் றைந்தினிற் சொல்லிய பரீட்சையில்
தெளிந்ததற் குரிய சீட்டினைப் பெற்றுத்
தெளிந்தவர் தங்கும் திருமந் திரத்தில்
‘சீவில்' ‘கிரிமினல்' என்றே செப்பிடும்
தாவா வழக்கும் தண்டமும் புரியும்
இருதிறக் கோர்ட்டினும் இயல்பொடு சென்று
வருவிவ காரத்தை வலுக்கொடு நடாத்தி
ஒண்பொருள் இயற்றி ஒளியினைப் பெருக்கிப்
பண்பினைச் செய்து பயன்படும் நாளையில்
சிறியவர் வழிகளிற் சென்று திரிந்தேன்.
அறிவுயர் தந்தைஎற் கறைந்தனன் ; இடித்தனன்.
ஒன்றினும் நல்வழி ஒன்றிட மாட்டேன்
என்றெனை என்னூர் ஏகிடச் செய்தே
அவணுள தண்டம் அளித்திடுங் கோர்ட்டில்
சிவணிஅத் தொழிலினைச் செய்திடச் செய்து
வாழ்க்கைத் துணையை மாண்புற அளித்து
வாழ்க்கையை ஒழுங்கில் வரும்படி செய்து
“பொருளும் குடியும் புகழொடு பெருக்கி
அருளும் தெருளும் ஆக்குக" என்றனன்.

 

24