உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வங்கத்தில் எழுந்த புயலுக்கு நேராக, திருநெல்வேலியில் புரட்சித் தீயைக் கிளப்பிவிட்ட, தேசபக்தக் கனல் அவர். தேசத்தின் உரிமைக்காக, ஜாமீன் மறுக்கப்பட்டு, செக்கிழுக்கும் சி வகுப்புக் கைதியாகச் சிறை சென்றவர்.

மேலோர்கள் வெஞ்சிறையில்
வீழ்ந்து கிடப்பதும்
நூலோர்கள் செக்கடியில்
நோவதுவும் காண்கிலையோ?

என்று பாரதியார் கண்ணீர் விடும்படி கோவைச் சிறையில் கொடுமைக்காளான தியாக புருஷர் அவர்.

காகம் பறக்காத சீமையை ஆண்டு, 'வானம் பொழியுது, பூமி விளையுது, மன்னனென் காணிக்கு எது பணம்?' என்று வெள்ளையனுக்குச் சவால் விடுத்த கட்டபொம்முவின் பாஞ்சைக் காற்று வீசும் வீர மண்ணில் பிறந்தவர், வ. உ. சி.

அவர் பிறவி வீரர்.

பூரண சுதந்திரத்தைப் பாம்பொருள் விசாரத்துடன் தேடித்திரியும் நமக்கு வ. உ. சி. வழிகாட்டும் தாரகை. இந்நூல் அவர் சரிதம்.

இந்தச் சுயசரிதையை நூலாசிரியர் திரு. பாலி நெல்லையப்பரின் வேண்டுகோளுக் கிணங்கி, எழுதியதாகத் தோற்றுவாய் கூறுகிறது. பாலி நெல்லையப்பரிடமிருந்து, நூலாசிரியரின் புத்திரர் நமக்கு வாங்கி உதவினார். பிதுர்வழி வேதம்போல, எங்கள் மூலம் இந்நூல் உங்களுக்குக் கிடைக்கிறது.

—முல்லை