உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலெக்டர் கலக்கம்: கவர்னருக்குத் தந்தி.

" நடந்தன எல்லாம் நஞ்செயல் அல்ல ;
கடந்து நிற்கும் கடவுளின் செயலே"
என்றவர்க் குரைத்தும் இனியசில மொழிந்தும்.
நன்றென இருந்தேம் நால்வரும் அங்கண்
பொழுதுபடு சமயம் போர்தரும் சிப்பாய்
பழுதற எம்முடல் பாது காத்திட
வந்தனர். வந்ததும் "மதுராஸ் கவர்னக்குத்
தந்திபோ யுளது சர்க்காரை நீவீர்
அழிப்பீர் என்றே; அந்நிய தேயம்
விழிப்பீர் விரைவில் மீளீர்" என்றனர்.
அந்த உரையினை அளித்ததற் காக
வந்தனம் அளித்து மறுமொழி யாக
"வருவன வெல்லாம் மாணிறை யீசன்
தருவன வென்றே தகவொடு கொள்வேம்.
ஆட்சியை இழந்தவர் அன்னியர் கையில்
மாட்சியைப் பெற்றிட மறந்தும் நினைப்பரோ?"
எனவுரை செய்தேம். ஏற்றதை மெய்யென
மனமகிழ் வுடனே மதித்தெமை நின்றனர்.
பின்னர் ஞாயிறு பிற்பகல் திடீரெனப்
பன்னிய ஜயிலர் பன்னிரு பருத்த
தடிகள்கைக் கொண்ட தடியர்கள் சகிதம்
மடமட வென்று வந்தனன் எம்மறை.
கால னோவெனக் கருதி அயிர்த்தேம்.
நான்கு பக்கமும் நன்கு வளைந்து பின்
அறைக்குள் நுழைந்தனன்; யாவையும் பார்த்தனன்.

85


85