பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடற்றிரட்டு

வக்கற் றொழிலைவிட்டு மாதவத்தைச் செய்திடயான்
மிக்கவாக் கொள்ள விரைந்ததற்குத் - தக்கவித
நீநடக்க வேண்டுமென்றோ நீங்காத வென்னைவிட்டு
வானடக்கக் கொண்டாய் மனம்.

முற்பிறப்பிற் செய்த முழுநல் வினைக்கீடா
யிப்பிறப்பிற் சேர்ந்திருந் தென்னையிவ - ணப்பிறப்பிற்
செய்தவரும் பொல்லாத தீவினையா லோவானூ
ரெய்தவுளங் கொண்டா யிசைந்து.

அவளது நற்செயல்களைப்பற்றிய பாக்கள்.



இல்லமதி லொன்றுமே யில்லையெனா ளெக்காலு
நல்லணவு தான் சமைத்து நல்குவா - ளல்லலொழித்
தின்புறவே செய்திடுவா ளெப்பணியு முள்ளமுட
னன்புமிகு நல்லா ளமைந்து.

என்னுடைய நேயர்களு மேழைபர தேசிகளு
மென்னுடைய வீடுவந்தா லேந்திழைதான் - றன்னுடைய
பெற்றோர்வந் தார்களெனப் பேணி யுபசரிப்பள்
கற்றோரு முள்ளுவக்கக் கண்டு.

ஓரிரவில் யானுமவ் வொண்டொடியை நீத்தாலவ்
வோரிரவுங் கண்ணே யுறங்காது - காரிரவை
நிந்தனையே செய்து நெறிகடந்த வென்றனுக்கும்
வந்தனையே செய்வாள் மகிழ்ந்து.

ஒருநாட் பிரிந்தாலவ் வுத்தமிதா னென்றன்
வருநாட் கணித்திருந்து வாளா - வொருநாளைப்
பன்னாளா வெண்ணிப் பசித்து முகம்வாடி
யென்னாளாய் வாழ்ந்திருந்தா ளிங்கு.

10