பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

வள்ளியம்மை சரித்திரம்.


மின்னனையாள் அன்னைபிதா மேன்மையுறு வள்ளியம்மை
என்னுந் திருநாமம்இட்டழைத்திப் — பொன்னினையாம்
பெற்றோம்முன் செய்த பெருந்தவம்யா தோவென்றின்
புற்றார் வளர்த்தார் உவந்து. ௩௭

பொன்மகளே போல்வாள் புகழ்போலும் புங்கமுடன்
அன்னவள் தான் செய்த அறம்போலும் — நன்மதியே
போலுந் தினந்தினமும் பொற்புடனே தான் வளர்ந்தாள்
சேலுண்கண் நல்லாள் சிறந்து. ௩௮

பெற்றோர்கள் முன்செய் பெருந்தவப்பே றோர்வடிவாய்
உற்றதுபோல் இங்கேவந் துற்றாளுக் — குற்றபேர்
வள்ளியம்மை யேனும் மகராசி யென்றழைப்பர்
ஒள்ளியநற் சீரால் உவந்து. ௩௯

மின்னேர் இடையாள் விளங்கெழிலும் நன்றேகொள்
அன்னம் நிகர்குணமும் ஆராய்ந்தோர் - அன்னவளைப்
பெற்றாரே பெற்றார் பெருந்தவப்பே றென்றின்பம்
உற்றே புகல்வார் உணர்ந்து. ௪௰

நன்சொல்லே நாளும் நவில்வாள் நறுங்குதலை
இன்சொல்லே தஞ்செவிகேட்டின்புறுவர் — முன்செய்
அருந்தவப்பே றுற்றோமென் றங்கவள் தாய் தந்தை
மருந்தருந்தி னார்போல் மகிழ்ந்து. ௪௧

நல்லுணர்வாள் இற்பிறந்த நாள்முதற்கொண் டாங்கேநற்
செல்வமும்பல் சீருஞ் சிறந்ததனால் — நல்ல
மகராசி யென்னும்பேர் மங்கைக்கிங் காருந்
தகவாகும் என்றுரைப்பர் தாம். ௪௨