பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணமகன் வீட்டார் பெண் தேடுதல்.


ஈங்கேயிவ் வாறிருக்க ஏர்சேர் அளகையாம்
ஆங்கே யுறுஞ்செயலும் யான் அறைவேன்—பாங்காக
அந்நகரம் மன்னுஞ் சிதம்பரத்துக் கன்னைபிதா
நன்மணஞ்செய் யத்துணிந்தோர் நாள். ௬௭

மைந்தன் உயரெழிற்கும் மாண்புக்குந் தக்கவொரு
சுந்தரமு மொண்குணமுந் தோய்ந்தவளாய்—வந்துறும்பெண்
நம்மரபில் சான்ற நமக்குரிய சுற்றத்தில்
எம்மகளிங் குண்டுசொலும் என்று. ௬௮

தஞ்சுற்றத் தாருடனே தாமுந்தம் முன்புதல்வி
யஞ்சொல் பகர்வள்ளி யம்மையும்—செஞ்சொல்கொண்
டாராயுங் காலத்தில் அவ்வள்ளி யம்மைமிகச்
சீராகச் சொல்வாள் தெளிந்து. ௬௯

ஏரார் திருச்செந்தூர் இன்னகரில் பொன்மகட்கு
நேராமோர் பெண்ணுண்டு நீதியுணர்—பாரோர்
புகழ்சுப் பிரமணிய பூமான் புதல்வி
தகைமைக் குலக்கொடி தான். ௭௰

மகராசி யென்றழைக்கும் மாண்வள்ளி யம்மை
தகவார் சிதம்பரமென் தம்பி—அகமுறும் நற்
சீருடையபெண்ணென்றாள் சேயிழையுந்தன் பெற்றோர்
ஆர்வமொடு கேட்டிடவே யாங்கு. ௭௧

இம்மொழியைக் கேட்டவுடன் ஏந்திழையின் தந்தைசொலும்
செம்மொழியாள் இப்பொழுது செப்பியபெண்—செம்மையுள்
செல்வற் கிசைந்தமிகு சீருடைய செவ்வியளே
சொல்லிற் குடிமாண்பும் தூய்து. ௭௨