பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18
வள்ளியம்மை சரித்திரம்.
கன்னி கொழுநன்சொற் காத்தறங்கள் செய்கவென்று
பொன்னனையார் மெய்ப்பொருளைப் போற்றிநிற்க—வன்னிதனை
ஆங்கே வலம்வந் தருந்ததியுங் காட்டினான்
ஓங்கெழிலான் மங்கைக் குவந்து. ௯௭

சிந்தைதனில் இன்பம் செறிந்தே மணமகனும்
பைந்தொடியும் பெண்கள் பலாண்டிசைப்ப—வந்த
குணமுடைய ஆடவர்கள் கூடிநின்று வாழ்த்த
மணஅறையுட் சேர்ந்தார் மகிழ்ந்து. ௯௮

நல்லவர்தம் மன்றற்கு நண்போடு வந்திருந்தோர்
எல்லவரும் சேர்ந்தங் கினிதாகச்—சொல்லரிய
மாண்புறுநல் போனகமுஞ் செய்து மகிழ்ந்திருந்தார்
காண்பரிய விந்தையெலாம் கண்டு. ௯௯

சீர்சேர் மணமகனுஞ் செல்வியும்நற் கோலமுடன்
ஊர்வலமும் வந்தார் உவப்பொடுவந்—தோர்களெலாம்
தம்பதிகட் கேகினர்காண் தங்கியிருந் தார்சிலநாள்
தம்பதிகள் அங்கின்பம் சார்ந்து.

தண்கடலில் ஆடித் தகைசேர் அறுமுகனைப்
பண்புறவே போற்றிப் பணிந்து தினம்—வண்புலவர்
ஆங்களித்த பாடலெலாம் அன்பொடுபெற் றுற்றனர்காண்
பாங்கோ டளகைப் பதி. ௱௧

அப்பதிவாழ் பெண்டிரும் ஆடவரும் கண்டுவக்கச்
செப்பமுடன் ஊர்கோலம் சென்றுவந்தே—அப்பதியில்
உள்ளோர் களுக்கெல்லாம் ஒப்பில் விருந்தளித்து
வள்ளியராய் வாழ்ந்திருந்தார் மற்று. ௱௨