பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாமன் மாமி முதலியோர்க்கு நடந்த நேர்மை.



பூமிமுழு தும்வியந்து போற்றவே தன்மாமன்
மாமி இளங்கொழுந்தர் மைத்துனிபால்—நேமமுடன்
இன்னாள் நடந்தவகை யின்பமொடு கூறுவேன்
என்னால் இயலுமள விங்கு. ௱௨௭

தன்னுடைய நாயகனின் தந்தையாம் மாதுலனைத்
தன்னுடைய தந்தையெனத் தன்னுளத்தில்—உன்னிநிதம்
செய்பணியா வுஞ்செய்வாள் சீர்சேர்தன் மாமியுடன்
தெய்வஅடி யார்போல் திகழ்ந்து. ௱௨௮

அன்பன்தன் அன்னைதன தன்னையெனக்கொண்டுளத்தில்
இன்பமொடு செய்திடுவாள் எப்பணியும்—அன்போ
டவள்சொற் கடவாள் அகிலமதில் மாமிக்
கிவளல்லால் நன்மருகி யேது. ௱௨௯

இல்லமதில் செய்தொழில்க ளெல்லாம் இவள்மாமி
சொல்லுமுனஞ் செய்திடுவாள் சோர்வின்றி—மெல்லியலாள்
மெய்வருந்து மென்றிரங்கி மேவியவள் செய்யலுறின்
செய்யவிடாள் மின்னாள் செறிந்து. ௱௨௰

பொன்மா தனையாளைப் புண்ணியமென் செய்தேனோ
நன்மா மருகியா நான்பெறவே—என்மா
மகராசி யிம்மனைக்கு வந்ததுதொட் டிங்கே
தகவாய தெம்மாண்புந் தான். ௱௨௧

என்றே மகிழ்ந்துரைப்பள் இன்பமொடு மாமியுந்தான்
நன்றோர் வடிவான நங்கையினை—என்றுமே
அந்நகர்வாழ் ஆயிழையார் அன்னையெனக் கொண்டவளின்
தன்மையினைப் போற்றுவரே சார்ந்து. ௱௩௨