உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெய்யறம்.


இதனைப்பற்றிய மதிப்புரைகளிற் சில:—

“ஸ்ரீமாந் வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்கள் இயற்றிய மெய்யறம் ஐந்தியலும் நூற்றிருபத்தைந் ததிகாரமுமாக முடிந்தநூல். ஐந்தியல்களாவன — முப்ப ததிகாரங்கொண்ட மாணவவியல், முப்ப ததிகாரங்கொண்ட இல்லாழ்வியல், ஐம்ப ததிகாரங்கொண்ட அரசியல், பத் ததிகாரங்கொண்ட அந்தணவியல், ஐந் ததிகாரங்கொண்ட மெய்யியல் என்பவை. ஒவ்வோரதிகாரமும் பப்பத்து வெண்செந்துறை கொண்டுள்ளது. முப்பாலில் அறமும் பொருளுந் தழுவி கால வேறுபாட்டிற்கு வேண்டும் விகற்பங் கூறலால் இந்நூல் திருவள்ளுவப்பயனுக்கு வழிநூலாக விளங்குகின்றது. முதுமொழிக் காஞ்சி போன்று திட்டமும் நுட்பமுஞ் சிறந்து இழுமென் மொழியால் விழுமிய பொருள் உரைத்தலால் இந்நூல் தோல் என்னும் வனப்புவாய்ந்தது. தமிழ்ப்புலவரே யன்றி இங்க்லிஷ் படித்த புலவரிற் பலரும் இந்நூலின் திறத்தை மெச்சுவர் என்பது துணிபு. ஒரு முறை கண்ணுறுவோர்க்கு இந்நூலின் அருமை தானே புலப்படுமாதலால், அதனை இங்கு விவரிப்பது மிகையாம். இந்நூல் நின்று நிலவுக என்பது என் வேண்டுகோள்”. —ஸ்ரீமாந் தி. செல்வகேசவராய முதலியாரவர்கள், சுதேச பாஷைகளின் அந்தியக்ஷகர், பச்சையப்பன் உயர்தரக் கலாசாலை, சென்னை.

"இந்நூல் சிறுசிறு செய்யுளாக இனிய செந்தமிழ் நடையில் இயற்றப்பட்டிருப்பதால் தமிழ் நாடெல்லாம் பரவுமென்பது நிச்சயம். இது மனிதர்களுக்கு இன்றியமையாத நீதி சாஸ்திரங்களிலுள்ள நித்திய நீதிகளை எடுத்துக் கூறுவதால் தற்காலம் தமிழ்க் கட்டுக்கதைகளை மாத்திரம் படிக்க முற்படுகின்ற அநேகருடைய சுவைக்கு மேற்பட்டதாயிருக்கு மென்பதில் சந்தேகமில்லை. இம்மேம்பாடே தமிழ் கற்கும் ஒவ்வொரு மாணவரும் இந்நூலைக் கற்கவேண்டுமென்பதற்குத் தக்க காரணமாகும். கலாசாலைகளைச் சேர்ந்த புத்தக சாலைகளில் அவற்றின் நிர்வாக கர்த்தர்கள் இந்நூலை வாங்கி வைப்பார்களானால் ஒரு பெரிய நன்மை செய்தவர்களாவார்கள்." —பிரஹ்மஸ்ரீப.வே.நரசிம்ஹ அய்யரவர்கள். சட்டசபை அங்கத்தினர், சென்னை.