பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொது நற்குணம்.
37
கங்கையைமுன் சேர்ந்திழந்த காவலனாஞ் சந்தனுபோல்
நங்கையினைச் சேர்ந்திழந்த நாயகனும்—இங்கிவளின்
மன்னெழிலும் மாண்பும் மதியும் நினைந்துழலும்
தன்னுளமும் மெய்யும் தளர்ந்து. ௨௧௧

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வராரென்னும் வாய்மையுணர்ந்—தாண்டகைதன்
அன்னைபிதா சுற்றத்தார் ஆன்றபுல வர்வேண்ட
இன்னொருபெண் கொள்ள இசைந்து. ௨௧௨

தன்மனைவி சுற்றத்தில் தக்கஒரு பெண்ணைத்தன்
நன்மனைவி யாக நனிமணந்து—பொன்மகள்நேர்
இம்மா தொடுநின் றிசைபெருக்கி வாழ்கின்றான்
இம்மா நிலத்தே யினிது. ௨௧௩

மன்புவியில் இம்மாதும் வள்ளியம்மை பெற்றுள்ள [ருள்கள்
மன்புகழெல் லாம்கொண்டு வாழ்கதொன்னூல்—நன்பொ
கற்றோன் சிதம்பரமன் கல்வியுறும் புத்திரப்பே
றுற்றோங்கி வாழ்க உவந்து. ௨௧௪

முந்நூல் களும்வாழ்க மூதறிவில் லேன்புகன்ற
இந்நூலும் வாழ்க இனிதாக—இந்நூலை
அன்போடு கற்போரும் கேட்போரும் அந்தமிலா
தின்போடு வாழ்க இவண். ௨௧௫

நல்லறமும் வாழ்க நவையறவே நானிலத்தோர்
இல்லறமும் வாழ்க இனிதாகச்—சொல்லரிய
மேலவரும் வாழ்கஅவர் மெய்ந்நெறியும் வாழ்கஇவண்
சீலமதும் வாழ்க சிறந்து. ௨௧௬

நூல் முற்றிற்று.